Published : 05 Jan 2019 03:53 PM
Last Updated : 05 Jan 2019 03:53 PM

தமிழகத்தில் தொடரும் கடும் பனி எத்தனை நாள் நீடிக்கும்?: தமிழ்நாடு வெதர்மேன் பதில்

தமிழகத்தில் தற்போது இரவில் நீடிக்கும் கடும் குளிர், பனி எப்போது வரை இருக்கும் என்பது குறித்து  தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் முழுவதும் குளிர்காலம் நிலவும். தமிழ் மாதத்தைப் பொறுத்தவரை, மார்கழி மாதம் கடும் பனிப்பொழிவு ஏற்படும். தை, மாசி மாதத்திலும் லேசான பனி நீடிக்கும். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் அதிக குளிரால் பனி மூட்டம் ஏற்படுவது வழக்கம்.

ஆனால், தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. மலைப்பிரதேசங்களான ஊட்டி, கொடைக்கானல், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி நிலவுகிறது. இதனால், மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு வெதர்மேன் பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் தமிழகத்தில் நிலவும் பனி குறித்துப் பதிவிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

தமிழக்தில் நிலவும் கடும் குளிர் பொங்கல் பண்டிகை வரை நீடிக்க வாய்ப்புள்ளது. தற்போது நிலவும் குளிர் அதிகரித்து, ஊட்டியில் நிலவும் குளிரைக் காட்டிலும் ஓசூரில் அதிகமான பனி நிலவுகிறது. மேற்கு மற்றும் உள்மாவட்டங்களான திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கோவை, வேலூர், ஆகிய மாவட்டங்களிலும் வரும் நாட்களில் கடும்பனி இருக்கும்.

இந்திய துணைக்கண்டத்தில் அதிகமான அழுத்தம் நிலவுவதால், அடுத்து வரும் நாட்களில் வடமாநிலம் மற்றும் தமிழகத்தில் கடும் குளிர்நிலவும். குறிப்பாகத் தமிழகம், பெங்களூர், மைசூரு ஆகிய நகரங்களில் இயல்பை விட அதிகமான குளிர் இருக்கும்.

கொடைக்கானல், ஊட்டியைக்(7.3 டிகிரி) காட்டிலும் ஓசூரில் குளிர் அதிகரித்து 7 டிகிரி செல்சியஸ் நிலவியது. வால்பாறையில் மிகக் குறைவாக 3.5 டிகிரி செல்சியஸ் இருந்தது.

இன்று காலை நிலவரப்படி தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் நிலவிய வெப்பநிலை

ஓசூர்-7 டிகிரி செல்சியஸ்

பையூர்-11.3 டிகிரி

அவினாசி-13.1 டிகிரி

பேரனாம்பட்டு-13.1 டிகிரி

கோவை சூளூர்-14.4 டிகிரி

திருத்தனி-14.5 டிகிரி

தர்மபுரி -14.5 டிகிரி

பெரியநாயக்கன்பாளையம்- 14.7 டிகிரி

கரூர்- 15 டிகிரி

வேலூர்- 15.5 டிகிரி

மலைப்பிரதேசங்கள்

வால்பாறை 3.5 டிகிரி

கொடைக்கானல், 7.3 டிகிரி

ஊட்டி 7.4 டிகிரி

ஜவ்வாது மலை 8.2 டிகிரி

குன்னூர் 8.2 டிகிரி

ஏர்காடு 10.டிகிரி

அந்தமான் அருகே உருவாகி இருக்கும் புயலால் தமிழகத்துக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை.ஒரு சொட்டு மழைகூட கிடைக்காது. தமிழகத்தில் தொடர்ந்து உயர்அழுத்தம் நிலவுவதால், பொங்கல் பண்டிகை வரை கடும் குளிர் வாட்டும்

இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x