

ஐஐடியில் சமீபத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்று ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்த தற்கொலை காரணமாக மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிப்பிட் பகுதியைச் சேர்ந்தவர் குருசந்த். இவரது மகன் கோபால் பாபு (26). சென்னை ஐஐடியில் எம்.டெக். ப்ரோகிராமிங் படித்து வந்தார். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள பிரம்மபுத்திரா விடுதியில் தங்கி இருந்தார். வழக்கம்போல் பாடம் முடிந்து கல்லூரியின் விடுதியில் நேற்றிரவு அவரது நண்பர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
பின்னர் அனைவரும் உறங்கச் சென்றனர். காலையில் அனைவரும் எழுந்து வகுப்புக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த நிலையில், கோபால் பாபு அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் மாணவர்கள் அவரது அறைக்கதவைத் தட்டினர். கதவு திறக்கப்படாததால் கல்லூரி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து நிர்வாகத் தரப்பில் கோட்டூர்புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீஸார் வந்து அறைக் கதவை உடைத்து திறந்து பார்த்தனர். உள்ளே மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கோபால் பாபு உடல் தொங்கியபடி இருந்தது. உயிரற்ற அவரது உடலை மீட்ட கோட்டூர்புரம் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோபால் பாபு தற்கொலை செய்துக்கொண்டது குறித்து உ.பி.யில் உள்ள அவரது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவர் தற்கொலை செய்து கொண்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஐடியில் இடம் கிடைப்பது சிரமமான ஒன்று. அந்த நிலையை அடைய மிகவும் கஷ்டப்பட்டு படித்து முன்னேறி வரும் மாணவர்கள் உயிரின் மதிப்பறியாமல் தற்கொலை செய்துகொள்வது ஐஐடியில் வாடிக்கையாகி வருகிறது. கடந்த 1-ம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த ஆராய்ச்சிப் படிப்பு மாணவி தனது அறைக்குள் தற்கொலை செய்துகொண்டார். தொடரும் தற்கொலை மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 4-ம் தேதி இயற்பியல் பேராசிரியை ஒருவர் குடும்பப் பிரச்சினையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
அதிக மன உளைச்சல், மன அழுத்தம், பிரச்சினைகளை எதிர்கொள்வதில் வரும் சோர்வு ஆகியவை தற்கொலை முடிவை நோக்கித் தள்ளுகிறது என்று கூறும் கல்வியாளர்கள் மாணவர்களுக்கு கல்வியுடன் உளவியல் ஆலோசனையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.