

அரசின் நிலைமையை அறிந்து, ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தி திணிப்பை எதிர்த்து உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் சென்னை கே.கே.நகரில் நடந்தது. இந்த விழாவில், முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
தமிழக அரசு சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை, தமிழக மக்கள் தேவைகளை அறிந்து செயல்பட்டு வருகிறது. அரசு நிதியை வைத்துக்கொண்டு வழங்காதது போல், திமுகவினர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அதைக் கேட்டுக் கொண்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று நிதிப் பிரச்சினை உள்ளது.
இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டிய நிலையில் உள்ளோம். அதே நேரத்தில் மழை இல்லாததால் நாமக்கல், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் கடும் வறட்சி நிலவுகிறது. சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. லாரி மூலம்தான் வடக்கு மாவட்டங்களில் தண்ணீர் தர வேண்டும். அதற்கு போதிய நிதி வேண்டும்.
இப்படிப்பட்ட நேரத்தில் போராட்டம் நடத்துவது சரியா? அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மாநிலத்தின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் படித்தவர்கள், நாட்டு மக்களின் பிரச்சினையை தெரிந்தவர்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு எதிர்க்கட்சிகள் தூண்டுதல்களின் பேரில் போராட்டம் நடத்துகின்றனர். இது தேவையற்றது.
அவர்கள் இதை கைவிட்டு, பணிக்கு செல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இது மக்களின் அரசு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் அரசு. அத்தனை பேரும் நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கை மலர வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு உள்ளது. அரசு ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இதை முதல்வர் குறை கூறுவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும். அரசின் வருவாயில் 75 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம் இவற்றுக்கு சென்றுவிடும். இதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.