

மத்திய அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய நிறுவன விவகார துறை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுளளது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த செல்வரத்தினம் என்ற பெண் உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார், அதில் மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் வேலை பார்த்து வரும் தன்னை மேல் அதிகாரி தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், கண்ணியக் குறைவாக நடத்துவதாகவும், தற்கொலை செய்து கொள்ள தூண்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் விசாகா கமிட்டி அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றமே உத்தரவிட்டுள்ள நிலையில், பெரும்பாலான மத்திய அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி அமைக்கப்படவில்லை என்றும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தஹில ரமாணி மற்றும் துரைசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து
மத்திய அரசின் கம்பெனி விவகார துறை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் பிப்ரவரி மாதம் 11-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.