

கோடநாடு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுபவர்களின் முகத்திரை விரைவில் கிழித்தெறியப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி 10-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் புகுந்து, காவலாளி ஓம்பகதூரை கொலை செய்தது. மற்றொரு காவலாளியை கட்டிப் போட்டுவிட்டு எஸ்டேட்டில் இருந்த விலை உயர்ந்த கை கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து தப்பியது. எஸ்டேட்டில் இருந்த முக்கிய ஆவணங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றதாக கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட அடுத்தடுத்து 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிக்கிய ஷயான், மனோஜ் ஆகியோர் டெல்லியில் கடந்த 11-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தனர். கோடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உட்பட 5 பேர் கொல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக ஆவணப் படம் ஒன்றை தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்டார். கோடநாடு சம்பவத்தின் பின்னணியில் முதல்வர் பழனிசாமி இருப்பதாகவும் மேத்யூஸ் சாமுவேல் குற்றம் சாட்டினார். ஆவணப் படத்தில் பேசியுள்ள ஷயானும் முதல்வர் பழனிசாமி மீது குற்றம்சாட்டியிருந்தார். இதனால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டை முதல்வர் பழனிசாமி மறுத்துள்ளார். சென்னையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘‘கோடநாடு சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி மேத்யூஸ் சாமுவேல் வெளியிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது. அந்த சம்பவத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. பொய்யான குற்றச்சாட்டின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ''கோடநாடு விவகாரத்தில் அரசியல் விளைவை ஏற்படுத்தக்கூடிய திட்டமிட்ட தாக்குதலாகத்தான் பார்க்கிறோம். இதற்கு வெகு விரைவில் முடிவு வரும். இவர்களைத் தூண்டிவிட்டது யார்? எந்த ரீதியில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பெரிய அரசியல் தலைவர் மீது எடுத்து வைக்கிறார்கள் என்று காவல்துறை ஆய்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கோடநாடு விவகாரத்தில் அரசியல் ஆதாயம் தேடுபவர்களின் முகத்திரை விரைவில் கிழித்தெறியப்படும்'' என்று தெரிவித்தார்.