கஜா புயல் ஏற்பட்ட போது அதிகாரிகள் யாரும் வரவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு: பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்

கஜா புயல் ஏற்பட்ட போது அதிகாரிகள் யாரும் வரவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு: பேரவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்
Updated on
2 min read

'கஜா' புயல் ஏற்பட்ட போது அதிகாரிகள் யாரும் வரவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (சனிக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'கஜா' புயல் தாக்குவதற்கு முன்பாக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றினார். அதன் விவரம்:

"கஜா புயலால் பாதிக்கப்பட்டபோது எந்த அதிகாரியும் அந்தப் பகுதியிலே வரவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை உறுப்பினர் பதிவு செய்துள்ளார். அது தவறானது. 'கஜா' புயல் வருவதற்கு முன்பாகவே, இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்த கருத்தின் அடிப்படையிலே, என் தலைமையிலே இருமுறை கூட்டம் கூட்டப்பட்டு, அந்தக் கூட்டத்திலே மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் எல்லாம் கலந்துகொண்டு, புயல் ஏற்பட்டால் நாம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் ஆலோசித்து, அந்த ஆலோசனையின்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், புயலால் பாதிக்கப்படக்கூடிய அந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு எல்லாம் அறிவுறுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், புயல் ஏற்படக்கூடிய அந்த மாவட்டங்களிலே, அந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து, அந்தப் புயல் வருகின்ற போது, மக்கள் எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது அதற்கு முன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அவர்களுக்கு துணையாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் முன்கூட்டியே அனுப்பிவைக்கப்பட்டனர்.

முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்ட காரணத்தினாலே, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால், அனைத்து மின் இணைப்புகளும் புயல் அடிப்பதற்கு முன்பாக 6 மணிக்கு மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. போக்குவரத்து இயக்கம் எல்லாம் நிறுத்தப்பட்டது.

அதுமட்டுமல்லாமல், இந்த புயல் கடுமையாக பாதிக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்ததால், குடிசையில் வாழ்ந்த மக்கள், தாழ்வான பகுதியிலே வாழ்ந்த மக்களை எல்லாம், அதிகாரிகள் தான் அவர்களை அழைத்து வந்து, பாதுகாப்பான முகாம்களில் தங்கவைத்திருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 81, 948 நபர்கள் 471 முகாம்களிலே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைத்ததன் காரணமாக உயிர் சேதம் பெருமளவு தடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, அதிகாரிகள் எல்லாம் வந்த காரணத்தினாலே தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, உறுப்பினர், 'கஜா' புயல் ஏற்பட்ட போது யாரும் வரவில்லை என்ற குற்றச்சாட்டு தவறு. வருவதற்கு முன்பாகவே, அங்கே இருக்கின்ற மாவட்ட அமைச்சர்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், மின்சாரத் துறை அதிகாரிகள், வேளாண் துறை அதிகாரிகள், இன்னும் பல்வேறு துறை சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் அங்கே அனுப்பி வைக்கப்பட்டு, புயல் ஏற்படுவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு, மக்களை காப்பாற்ற வேண்டுமென்ற அடிப்படையிலே, அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருக்கிறது" என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in