

உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலை வரலாறு பயிலும் மாணவி ஒருவர், பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கண்ணன் மீது நாகமலைப்புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் உதவி பேராசிரியர் கண்ணன் தனது செல்போன் எண்ணுக்கு ஆக. 6 முதல் 11 வரை 350 ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பினார்.
மேலும், தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறியிருந்தார். இதையடுத்து கண்ணன் மீது போலீஸார் கொலை மிரட்டல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு அந்த மாணவி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கண்ணனும், அவரது ஆள்களும் எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். கண்ணனுடன் நான் சமாதானமாக போகாவிட்டால் முகத்தில் ஆசிட் வீசுவதாக மிரட்டுகின்றனர்.
நான் உயர்கல்வியை சிறப்பாக முடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். கண்ணன் மற்றும் அவரது ஆள்களின் மிரட்டல் காரணமாக என்னால் பல்கலைக்கழகத்துக்கு நிம்மதியாக செல்ல முடியவில்லை. எனவே நான் பல்கலைக்கழகத்தில் இருக்கும்போது எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மாணவிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க நாகமலைப்புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.