Last Updated : 30 Jan, 2019 05:37 PM

 

Published : 30 Jan 2019 05:37 PM
Last Updated : 30 Jan 2019 05:37 PM

கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா விவாகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கில் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கதிரேசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "குட்கா முறைகேடு தொடர்பாக கடந்த 2016-ல் சென்னை குட்கா நிறுவன குடோனில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியபோது காவல்துறையினர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு லஞ்சமாகப் பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின.

குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்து அப்போதைய தலைமைச் செயலர் ராமமோகனராவ், அப்போதைய டிஜிபி அசோக்குமார் ஆகியோரிடம் வருமான வரித்துறை முதன்மை ஆணையர் ஒரு கடிதம் அளித்தார். இந்தக் கடிதத்தை டிஜிபி, முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார்.

இந்நிலையில் குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி நான் ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தேன். அந்த விசாரணையின் போது, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில், "குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை" என பிரமாணப் பத்திரம் இதனை ஏற்று அந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே சென்னை போயஸ் கார்டன் ஜெயலலிதா வீட்டில் கடந்த 2017-ல் வருமான வரித்துறை சோதனையின் போது, குட்கா முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான வருமான வரித்துறை அளித்த கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன.

அந்த ஆவணங்களும் நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தவறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, குட்கா விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறையினர் டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது மற்றும் தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது,வருமான வரித்துறை சார்பில் குட்கா விவாகரம் தொடர்பாக நடவடிக்கை கோரி வருமானத்துறை அனுப்பிய கடிதம் தலைமைச் செயலர் அலுவலகத்திற்குச் சென்றடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு அரசுத் தரப்பில் அந்தக் கடிதம் சென்றடைந்த போது தற்போதைய தலைமைச் செயலர் பொறுப்பில் இல்லை. மேலும், அவர் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த போது, குட்கா புகார் தொடர்பான ஆவணங்கள் ஏதும் இல்லை. ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது" என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x