Published : 13 Sep 2014 11:37 AM
Last Updated : 13 Sep 2014 11:37 AM

ஜம்மு - காஷ்மீர் வெள்ள நிவாரணம்: வைகோ ரூ.10 லட்சம் நிதியுதவி

ஜம்மு காஷ்மீர் வெள்ள நிவாரணத்திற்காக மதிமுக சார்பில் பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படுவதாக அக்கட்சிப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "கடந்த நூறாண்டு காலத்தில் ஏற்படாத வெள்ளப் பேரழிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதவிக்கின்றனர். பெரும் அளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. வீடு வாசல் உடைமைகள் அனைத்தையும் அம்மாநில மக்கள் இழந்துள்ளனர்.

உலகத்தின் உன்னதமான சுற்றுலாத்தலமாக இயற்கை எழிலுடன் வனப்புடன் திகழ்ந்த காஷ்மீரம் அழிவின் இடிபாடாகக் காட்சி அளிக்கிறது.

மத்திய-மாநில அரசுகளும் குறிப்பாக, இந்திய இராணுவமும் கடுமையான மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இப்பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீர் மக்களின் துயரத்தில் பங்கேற்று, அவர்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு உதவிட நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் துயர் துடைக்க பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது" இவ்வாறு வைகோ அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x