Published : 11 Jan 2019 09:35 AM
Last Updated : 11 Jan 2019 09:35 AM

20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் வரவேண்டுமென கட்டுப்பாடு; ரயில் நிலையங்களில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் அதிகம்: அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் செயல்படுத்த இயலாது

பாதுகாப்பை மேம்படுத்திட 20 நிமி டங்களுக்கு முன்பே பயணிகள் வர வேண்டுமென்ற ரயில்வேயின் புதிய அறிவிப்பை, போதிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் நடை முறைப்படுத்தினால் அதிக சிக்கல் இருக்கும் என பயணிகளும், ரயில்வே ஊழியர்களும் தெரிவிக் கின்றனர்.

விமான நிலையத்தில் இருப்பது போல், ரயில் நிலையங்களிலும் ரயில்கள் புறப்படுவதற்கு 15 முதல் 20 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் வரவேண்டும். அதன் பிறகு, பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற புதிய திட்டத்தை நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 202 ரயில் நிலையங்களில் அமல் படுத்த இருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை மேம் படுத்திட இதுபோன்ற திட்டங்கள் உதவும் என்று வரவேற்றாலும், நடைமுறையில் இதை செயல் படுத்த கட்டமைப்பு வசதிகள் இன்னும் போதிய அளவில் இல்லை. பெரிய ரயில் நிலையங்களான சென்னை சென்ட்ரல், எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களிலேயே உள்ளே செல்லவும், வெளியேறவும் தலா 5 வழிகள் இருக்கின்றன.

இதேபோல், பெரும்பாலான முக்கிய ரயில் நிலையங்களின் உள்பகுதியில் மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. இப்படி இருக்கும்போது, எந்த ரயிலுக்கான பயணிகள் என உடனடியாக கண்டறிவதில் சிக்கல் உள்ளது. மேலும், லட்சக்கணக்கான பயணி களிடம் உடனுக்குடன் டிக்கெட் பரிசோதித்து அனுப்ப ஆட்களும், பாதுகாப்பு பிரிவினரும் போதிய அளவில் இல்லை. எனவே, ரயில்வேயின் இந்த புதிய அறிவிப்பை செயல்படுத்துவதில் அதிக சிக்கல்கள் இருக்கின்றன.

அடிப்படை வசதிகள்

இதுதொடர்பாக சிட்டிசன் கன்சியூமர் அண்ட் சிவில் ஆக் ஷன் குரூப் (சிஏஜி) அமைப்பின் இயக்கு நர் (ஆலோசகர்) எஸ்.சரோஜா கூறியதாவது: ரயில்களை ஒப்பிடும் போது விமானங்களில் பயணிப் போரின் எண்ணிக்கை குறைவு. மேலும், விமான நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் ஏற்கெனவே மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால், ரயில் நிலையங்களில் இன்னும் போதிய அளவில் அடிப் படை வசதிகள் மேம்படுத்தப் படவில்லை. பல்வேறு ரயில் நிலையங்களில் போதிய அளவில் இருக்கை, குடிநீர், கழிப்பிட வசதிகளே இல்லாமல் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இதுதவிர, பல்வேறு இடங்களில் நுழைவு வாயில்கள் இருக்கின்றன. இவற்றை முதலில் முறைப்படுத்த வேண்டும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரயில் நிலையங்கள் முன்பு போதிய அளவில் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

குறிப்பாக, சென்னை சென்ட்ரல் முன்பு இருக்கும் மேம்பாலத்தில் மட்டுமே அலுவலக நேரங்களில் 15 முதல் 20 நிமிடங்கள் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்பிறகு, ரயில்வே அறிவித்துள்ள புதிய அறிவிப்பை செயல்படுத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நடைமுறை சிக்கல்

இதுதொடர்பாக ரயில்வே அலு வலர்கள் சிலர் கூறும்போது, ‘‘ஒவ்வொரு ரயில் நிலையங் களிலும் பல நுழைவு வாயில்கள் உள்ளன. ஒட்டுமொத்த பயணிகளின் டிக்கெட்களை பரிசோதித்து உடனடியாக உள்ளே அனுப்ப முடியாது. பயணிகளை நீண்ட வரிசையில் நிறுத்தி அனுமதித்தால் தாமதம் ஏற்படும். மேலும், ஆட்கள் பற்றாக்குறையும் இருக்கிறது.

குறிப்பாக, தெற்கு ரயில்வே யில் வணிகப் பிரிவில் மட்டுமே 1,500-க்கும் மேற்பட்ட காலிப் பணி யிடங்கள் உள்ளன. விமான நிலையத்தில் ஒரு விமானத்துக் குச் செல்ல வேண்டுமென்றால் ஒரு பாதையில் அனுமதிக்கப்படு வார்கள். ரயில் நிலையங்களில் அப்படி இல்லையே?, 10 ரயில் களுக்கு ஒரே வழியாகத்தான் செல்ல வேண்டியுள்ளது. எனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன’’ என்றனர்.

பயணிகளுக்கு பயனில்லை

இதுதொடர்பாக டிஆர்இயு உதவி தலைவர் இளங்கோவன் கூறும்போது, ‘‘ரயில்வேயில் பாதுகாப்புத் திட்டங்களை மேம்படுத்த வேண்டாமென கூறவில்லை. அதற்கு முன்பு ஆக்கப்பூர்வமான திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும். பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் ஒவ்வொரு ரயிலிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஆயிரக்கணக்கான பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கியும், படியில் நின்றுக் கொண்டும் பயணம் செய்கிறார்கள்.

இதற்குத் தீர்வு காண கூடுதல் ரயில்களை இயக்க போதிய அளவில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அதன்பிறகு, ரயில்களை சரியான நேரத்தில் இயக்குவதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். இதையெல்லாம் செயல்படுத்தாமல், விமானம் நிலையம் போல் ரயில் நிலையங்களிலும் பயணிகள் 20 நிமிடங்களுக்கு முன்பே வரவேண்டுமென ரயில்வே அறிவிப்பதில் பயணிகளுக்கு எந்த பயனும் கிடையாது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x