

ஆட்டோவில் பயணி தவறவிட்ட ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவிய ஆட்டோ ஓட்டுநரை நேரில் அழைத்து காவல் ஆணையர் பாராட்டி வெகுமதி அளித்தார்.
சென்னை நெற்குன்றம் சி.டி.என்.நகர் முகவரியில் வசிப்பவர் சி.பார்த்திபன். இவர் (45) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வரும் பார்த்திபன் வழக்கம்போல் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கோயம்பேடு, சின்மயா நகர், கிரேஸ் தங்கும் விடுதியிலிருந்து இரண்டு நபர்களை சவாரி ஏற்றிக்கொண்டு பி.எச்.ரோடு, ரோகிணி தியேட்டர் எதிரே உள்ள லான்சன் டோயட்டோ கார் ஷோரூம் அருகே அவர்களை இறக்கிவிட்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் சென்ற பிறகு மேற்படி ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவின் பின் இருக்கையைப் பார்த்த போது, அங்கு பயணி தவறவிட்ட லேப்டாப் பை இருப்பதைப் பார்த்துள்ளார். உடனே பார்த்திபன் பையைத் திறந்து பார்த்த போது அதில் அதிக அளவில் பணம் இருப்பது தெரியவந்துள்ளது. உடனே பார்த்திபன் மேற்படி பணம் அடங்கிய லேப்டாப் பையை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்நிலையில் பணத்தைத் தவறவிட்ட தூத்துக்குடி மாவட்டம், லூர்தம்மாள் புரத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன் (27) என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஆட்டோவில் சவாரி செய்த போது ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை தவறவிட்டதாக புகார் அளித்திருந்தார்.
போலீஸார் விசாரணையில் பணத்தைத் தவறவிட்ட முகமது அசாருதீன், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு கார் வாங்க வந்தபோது ஆட்டோவில் பணத்தை தவறவிட்டது தெரியவந்தது.
பார்த்திபனின் ஆட்டோவில்தான் அசாருதீன் பயணம் செய்ததும் தெரியவந்தது.
பணப்பை முகமது அசாருதீனுக்கு சொந்தமானது என்பதையடுத்து போலீஸார், ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், மற்றும் புகார்தாரர் அசாரூதின் ஆகிய இருவரையும் கோயம்பேடு சிஎம்பிடி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
சிஎம்பிடி காவல் நிலைய ஆய்வாளர் விசாரணை நடத்தி ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் அடங்கிய லேப்டாப் பையை முகமது அசாருதீனிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபனின் நேர்மையான செயலைக் கேள்விப்பட்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபனை அலுவலகத்துக்கு அழைத்துப் பாராட்டி அவருக்கு வெகுமதி வழங்கினார்.
இதேபோன்று பள்ளி மாணவனிடம் செல்போன் மற்றும் கைக்கடிகாரத்தைப் பறித்த 4 சிறுவர்களை விரட்டிச் சென்று பிடித்த போக்குவரத்து தலைமைக்காவலர் மற்றும் நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் ஆகியோரையும் காவல் ஆணையர் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை கே.கே.நகர் பகுதியில் வசிக்கும் 13 வயது சிறுவன் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் பள்ளி நண்பர் ஒருவருடன் சேர்ந்து சைக்கிளில் விருகம்பாக்கம், ஆவிச்சி பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 சிறுவர்கள் மேற்படி இரண்டு சிறுவர்களையும் வழிமறித்து மிரட்டி அவர்களிடம் இருந்து 1 செல்போன், 1 கைக்கடிகாரம் மற்றும் பர்ஸ் ஆகியற்றை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
உடனே செல்போன் மற்றும் கைக்கடிகாரத்தைப் பறிகொடுத்த சிறுவர்கள் அழுதுகொண்டே அருகில் போக்குவரத்து பணியிலிருந்த விருகம்பாக்கம் போக்குவரத்து தலைமைக் காவலர் பி.பாலாஜி மற்றும் விருகம்பாக்கம் நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் என்.ராஜா ஆகியோரிடம் கூறியுள்ளனர்.
தலைமைக் காவலர்கள் இருவரும் விரைந்து செயல்பட்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை தேடிச் செல்லும் போது, விருகம்பாக்கம், ஏ.வி.எம் காலனி 2 வது தெருவில் சந்தேகத்திற்கிடமாகப் பதுங்கியிருந்த நான்கு சிறுவர்களை விரட்டிச் சென்று பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சைக்கிளில் வந்த சிறுவர்களிடம் செல்போன், கைக்கடிகாரம் மற்றும் பர்ஸ் ஆகியவற்றைப் பறித்துச்சென்றது தெரியவந்தது.
அதன் பேரில் நான்கு பேரையும் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
வழிப்பறியில் ஈடுபட்ட 4 சிறுவர்களைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த விருகம்பாக்கம் போக்குவரத்து தலைமைக் காவலர் பாலாஜி மற்றும் விருகம்பாக்கம் நுண்ணறிவுப்பிரிவு தலைமைக் காவலர் ராஜா ஆகியோரை காவல் ஆணையாளர் ஏ.கே. விஸ்வநாதன் இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.