Published : 29 Jan 2019 11:51 AM
Last Updated : 29 Jan 2019 11:51 AM

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் உளுந்து, பச்சைப்பயறு, துவரை கொள்முதல்:  பிப்ரவரி 1 முதல் தொடங்கும் என வேளாண் துறை அறிவிப்பு

நடப்பாண்டில் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் உளுந்து, பச்சைப்பயிறு, துவரை ஆகிய பயறுவகைகள் பிப்.1-ம் தேதிமுதல் கொள்முதல் செய் யப்படும் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மைத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வேளாண் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டு உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்த தால் விவசாயிகளுக்கு நல்ல லாபகரமான விலை கிடைத்தது.

அதுபோல நடப்பாண்டில் (2018-19) பயறுவகைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களிடம் இருந்து 58 ஆயிரத்து 425 மெட்ரிக் டன் உளுந்து, 16 ஆயிரத்து 900 மெட்ரிக் டன் பச்சைப்பயறு, 10 ஆயிரம் மெட்ரிக் டன் துவரை ஆகியவற்றை கொள்முதல் செய்ய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

அதன்படி உளுந்து கிலோ ரூ.56 என்ற விலையிலும், பச்சைப்பயறு கிலோ ரூ.69.75-க்கும், துவரை கிலோ ரூ.56.75-க்கும் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இதற்கான தொகை நேரடியாக வரவு வைக்கப்படும். வேலூர், தர்மபுரி, சேலம், ஈரோடு, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் தற்போது துவரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் 14-ம் தேதிவரை இக்கொள்முதல் செய்யப்படும்.

தூத்துக்குடி, விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மாவட் டங்களில் வரும் பிப்ரவரி 1-ம் தேதிமுதல் 90 நாட்கள் வரை பச்சைப்பயறு கொள்முதல் செய் யப்படும். தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பிப்.1-முதல் 90 நாட்கள் வரை பச்சைப்பயறு கொள்முதல் செய்யப்படும்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிப்.1-முதல் 90 நாட்கள் வரை உளுந்து கொள்முதல் செய்யப்படும். அதுபோல தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பிப்.1-முதல் 90 நாட்கள் வரை உளுந்து கொள்முதல் செய்யப்படும். இந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விற்பனைக் குழுக்கள் முதன்மை கொள்முதல் முகமைகளாகவும், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில அளவிலான முகமையாகவும் செயல்படும்.

இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்ப னைக்கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் மூலம் நல்ல லாபகரமான விலை கிடைக்கும் என்பதால் பயறுவகைகளை உற் பத்தி செய்யும் விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x