Published : 19 Jan 2019 08:56 AM
Last Updated : 19 Jan 2019 08:56 AM

மோடி, அமித்ஷா முயற்சிக்கு பின்னடைவு?- பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயங்கும் அதிமுக

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயக்கம் காட்டி வருகிறது. இது பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷாவின் முயற்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி யுள்ளது.

மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளன. கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்தக் கூட்டணியில் மதிமுக,மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆளும் அதிமுகவை பொறுத்தவரை, இதுவரை கூட்டணி எதுவும் உறுதியாகவில்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற தனிக்கட்சியை தொடங்கியுள்ள டிடிவி தினகரன், தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து, சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ள நிலையில், அதை எதிர்கொள்ள அதிமுக திரைமறைவில் சில கட்சிகளுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. மத்தியில் ஆளும் பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. 39 தொகுதிகளைக் கொண்ட பெரிய மாநிலம் தமிழகம் என்பதால், இங்கு காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை வென்றுவிடக்கூடாது என்பதில் மோடியும், அமித்ஷாவும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

கூட்டணி தொடர்பாக, டெல்லி வந்த தமிழக அமைச்சர்களிடம் அருண் ஜேட்லி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பேசியுள்ளனர். ஆனாலும், அவர்கள் எந்தப் பிடியும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 2 வாரங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இருவரும் ஒரே நாளில் அடுத்தடுத்து சந்தித்துப் பேசினர். அப்போது, பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற மோடி, அமித்ஷாவின் விருப்பத்தை முதல்வரிடம் தெரிவித்துள்ளனர். அதை ஏற்க மறுத்த முதல்வர், ‘‘தமிழகத்தில் மோடி அரசுக்கு ஆதரவான சூழல் இல்லை. நீட்தேர்வு, காவிரி விவகாரம், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் பாஜக அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, பாஜகவுடன் கூட்டணி வைத்தால், அது திமுகவுக்கு சாதகமாகிவிடும்’’ என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

தங்களுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்புவது குறித்து அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் ஆலோசித்து வருகின்றனர். அதில் பெரும்பாலான அமைச்சர்களும், நிர்வாகிகளும் பாஜகவுடன் கூட்டணி வைக்கவே கூடாது என உறுதிபட கூறிவருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன் வெளிப்பாடாகவே, அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மக்களவை துணைத் தலைவருமான மு.தம்பிதுரை, ‘பாஜகவை நாங்கள் ஏன் தூக்கி சுமக்கவேண்டும்’ என பகிரங்கமாக பேசியுள்ளார். அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘அதிமுக விரும்பினால்தான் பாஜகவுடன் கூட்டணி அமையும்’ என தெரிவித்துள்ளார். அதேபோல் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் பாஜகவுக்கு எதிராக வெளிப்படையாகவே அடிக்கடி பேசி வருகின்றனர்.

இதற்கு பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை,ஹெச்.ராஜா போன்ற பாஜக தலைவர்கள்தான் பதிலளிக்கிறார்களே தவிர, அதிமுக தலைமையில் இருந்து எந்த மறுப்போ விளக்கமோ இதுவரை வரவில்லை. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மோடியும், அமித்ஷாவும் பல வழிகளில் முயன்றும் அதற்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு, எம்ஜிஆர் நூற்றாண்டு சிறப்பு நாணயம் வெளியீட்டு விழா ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்தும் பிரதமர் மோடி வரவில்லை. முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோரிடம் இருந்து கூட்டணி குறித்து சாதகமான பதில் எதுவும் வராததே இதற்கு காரணம் என அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி கோவையில் நடந்த ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பேசிய அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி, ‘‘நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் நிலையான ஆட்சி அமைய, அதிமுக - பாஜக கூட்டணி அமைய வேண்டும்’’ என கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் தம்பிதுரை, ஜெயக்குமார் போன்றோர் பதிலளித்துள்ளனர். இதன்மூலம், பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக தயக்கம் காட்டி வருவது தெரியவந்துள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மோடி, அமித்ஷா ஆகியோர் எடுத்த முயற்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x