

திருக்கழுக்குன்றம் அடுத்த நல்லூர் கிராமத்தில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த நல்லூர் கிராமப் பகுதியில் ஆகஸ்ட் மாதம் மர்ம காய்ச்சல் பரவியதில் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட சைதாப்பேட்டை துணை சுகாதார இயக்குநர் ராஜசேகர் தலைமையில், மருத்துவ குழுவினர் அந்த கிராமத்தில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி வழங்கி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படும் மாரியம்மாள் (45) என்ற பெண்ணுக்கு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் புதன்கிழமை அவர் உயிரிழந்தார். இதனால், நல்லூர் கிராம மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டம் சைதாப்பேட்டை துணை சுகாதாரத்துறை இயக்குநர் ராஜசேகரிடம் கேட்டபோது: ‘மருத்துவக் குழுவினர் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மாரியம்மாளின் பெயர் இல்லை. அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக பாதிப்பும் அதனால் வயிற்று வலியும் இருந்துள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்ததாக கூறப்படுகிறது. எனினும், அவர் இறந்தது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.