கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்; தமிழக அரசைக் கண்டித்து வரும் 5-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்; தமிழக அரசைக் கண்டித்து வரும் 5-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்: திமுக அறிவிப்பு
Updated on
1 min read

சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் ஏழை கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தத்தை செலுத்திய ஆளும் அதிமுக ஆட்சியின் அலட்சியப் போக்கைக் கண்டித்து 5-1-2019 அன்று காலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக மருத்துவர் அணி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக மருத்துவர் அணியின் தலைவர்  பூங்கோதை ஆலடி அருணா, செயலாளர்  என்.வி.என்.சோமு கனிமொழி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ''மக்கள் நலனில் கிஞ்சிற்றும் அக்கறையில்லாத ஆளும் அதிமுக அரசின் மெத்தனப் போக்கினாலும் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை

எடுக்காத காரணத்தாலும், ஏற்கெனவே தமிழகம் முழுவதும் உயிர்க்கொல்லி நோயான டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் காரணமாக, கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் மரணமடைந்தனர். அதன் தொடர்ச்சியாக ஆளும் அதிமுக ஆட்சியின் அலட்சியப் போக்கினால், விருதுநகர் மாவட்டம், சிவகாசி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாத்தூரைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்தி, அந்த ஏழை கர்ப்பிணிப் பெண்ணின் வாழ்க்கையையே பலி வாங்கியுள்ளது ஆளும் அதிமுக அரசு.

இது தமிழத்தை மட்டுமல்ல; இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் - அரசு மருத்துவ மனைகளில் நோயாளிகளுக்கு செலுத்தப்படும் இரத்தம் முறையாக பரிசோதனை ஏதும் செய்யாமல், அப்படியே நோயாளிகளுக்கு செலுத்தியது அரசின் நிர்வாகத் திறனின்மையும் - அலட்சியப் போக்கும்தான் காரணம்.

எனவே, தொடர்ந்து ஏழை, எளிய தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் ஆளும் அதிமுக அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து, வருகிற 5-1-2019 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக மருத்துவ அணியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஏழை, எளிய தமிழக மக்களின் உயிரோடு விளையாடும் ஆளும் அதிமுக அரசைக் கண்டித்து நடைபெறும் இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக மருத்துவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட திமுக மருத்துவர் அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் - திமுக மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அதிமுக அரசின் அலட்சியப் போக்கை கண்டிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in