Published : 28 Jan 2019 10:27 AM
Last Updated : 28 Jan 2019 10:27 AM

‘இந்து தமிழ் - ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ பயிலரங்கம்: சாதாரண குடும்பத்தில் இருந்து வருவோரே அதிகம் சாதிக்கிறார்கள்; புதுச்சேரி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பெருமிதம்

வெற்றிக்கும், சாதனைக்கும் குடும்ப பின்னணி ஒரு காரணம் இல்லை; மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களே இன்று ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சாதிக்கிறார்கள். அதற்கு நானே உதாரணம் என்று திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.

‘இந்து தமிழ்' நாளிதழ் ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி'யுடன் இணைந்து ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்' நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சி யாக புதுச்சேரியில் உள்ள விவே கானந்தா மேல்நிலைப் பள்ளியில் இந்நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்புரையாற்றிய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பேசியது:

சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவன் நான். எனது அப்பா அரசு பள்ளி ஆசிரியர். மழை பொழியும்போது வீட்டில் தண்ணீர் சொட்டும். பாத்திரம் வைத்து விட்டு தூங்காமல் இருந்த இரவுகள் பல உண்டு. சிரமப்பட்டு படித்தேன். சாதாரணமாகதான் படித்தேன். நான் பெரிய மேதாவியெல்லாம் இல்லை.

போட்டித் தேர்வுகளுக்கு தயாராக இப்போது இருக்கும் வாய்ப்புகள் எதுவும் நான் படிக்கும் காலத்தில் இல்லை. சரியான வழிகாட்டுதல் இல்லை. குழு விவாதத்தில் பேச பயந்து விலகி ஓடியிருக்கிறேன். ஆனாலும் அதன் பிறகு வந்த மன உறுதியால், நம்பிக்கையால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றேன்.

இங்கிருப்பவர்கள் வீட்டுக்குச் சென்று, ஒரு 2 மணி நேரம் மட்டும் கண்ணை கட்டிக்கொண்டு இருந்து பாருங்கள். பார்வை இல்லாமல் இருப்பது எவ்வளவு கொடுமை என்று அப்போது புரியும். இங்கு நமக்கு ஆலோசனை தர வந்திருக் கும், வெளியுறவுத் துறை அதிகாரி பெனோ ஜெபின் முழுமையாக பார்வையற்றவர். அவர் பார்வை யற்றோருக்கான டாப் ரேங்கிங்கில் ஐஎப்எஸ் தேர்வில் (இந்திய அயலகப் பணி) வெற்றி பெற்று 5 வருடங்களாக சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரது நம்பிக்கையே அவரை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது.

குடிமைப் பணித் தேர்வு உட்பட எந்தப் பணித் தேர்வு என்றாலும் திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம்.

பயிர் வைக்கும் விவசாயி தன் பயிரைப் பார்த்து பார்த்து வளர்ப்பார். பயிர் பருவத்தே பலன் தர வேண்டும். அதேபோல் உங்கள் பெற்றோரும் நீங்கள் பொறுப்பான ஒரு இடத்துக்கு வர வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி வராவிட்டால் நீங்கள் பலனில்லா பயிருக்கு சமமாகி விடுவீர்கள்.

நீங்கள் விரும்பியதை பெறும் மன உறுதியை வளர்த்து கொள்ளுங்கள். நம்பிக்கையோடு அணுகினால் யுபிஎஸ்சி தேர்வுகளை வெல்வது எளிது. எனது மூலதனம் கல்விதான். உங்கள் மூலதனமும் அதுதான். கல்வி மட்டுமே உங்களை உயர்த்தும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் வெல் பவர்கள் பலர் உயர்ந்த இடத்தில் இருந்து வரவில்லை. எளிய சாதா ரண குடும்பத்தில் இருந்தே வருகி றார்கள். அனைவருக்கும் வாய்ப் புள்ளது. சரியாக திட்டமிடுங்கள். அதுவே வெற்றிக்கு வித்திடும்.

பள்ளி, கல்லூரிகளில் பாடத்தை புரியாமல் படித்து விட்டோம். போட்டித் தேர்வை வெல்ல முடியாததற்கு முக்கிய காரணம் இது. புரிந்து பாடத்தை படித்து உள்வாங்கினால்தான் வெல்ல முடியும். ஆறாவது முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களை படியுங்கள். அதுதான் போட்டித்தேர்வுக்கு அடிப்படை அஸ்திவாரம். போட்டித் தேர்வுக்கு தயாராவோர் செய்தித்தாள் படிப்பது மிக அவசியம். திட்டமிட்ட கடின உழைப்பு உங்களை நிச்சயம் இத்தேர்வில் வெற்றி பெற வைக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகள் தொடர்பான பல்வேறு ஐயங்களை எழுப்ப, சிறப்பு அழைப்பாளர்கள் அவர்களது கேள்விகளுக்கு பதில் அளித்தனர். புதுச்சேரி மட்டு மல்லாது கடலூர், விழுப்புரம் மாவட் டங்களில் இருந்தும் இளைஞர் கள் ஏராளமானோர் இந்நிகழ்ச் சிக்கு வந்திருந்தனர். நிகழ்ச்சியை முதுநிலை உதவி ஆசிரியர் மு.முரு கேஷ் தொகுத்து வழங்கினார்.முடங்கியிருப்பதே மூடத்தனம்: பெனோ ஜெபின் ஐஎஃப்எஸ்

நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி பெனோ ஜெபின் ஐஎஃப்எஸ் பேசியது:

உடல் குறைபாட்டை நினைத்து முடங்கியிருக்காமல் தான் அறிந்ததை ஆராய்ந்து, இந்த உலகுக்கு உணர்த்திய ஸ்டீவன் ஹாக்கிங், ஹெலன் கெல்லர் என பலர் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக உள்ளனர். எனக்கு பார்வை குறைபாடு பெரிய குறையாக தெரியவில்லை. ஏனென்றால் பார்வை எப்படி இருக்கும் என்றே எனக்கு தெரியாது.

சாதனைக்கு பண பலம் தேவையில்லை. அது தேவையென்றால் விலாசமே இல்லாத பலர் இந்த உலகில் சாதித்திருக்க முடியாது. பத்தாம் வகுப்பில் பார்வையற்றோர் பிரிவில் முதலிடம் பிடித்தேன். பொதுப்பிரிவில் முதலிடம் வந்தால் செய்தித்தாளில் வரும். நான் முதலிடம் பிடித்தும் அப்படி வரவில்லை. முதல்வரை சந்தித்து பேசினேன். அதையடுத்து பார்வையற்றவர்கள் கல்வியில் சாதனை புரிந்தால் நிதியுதவி தர அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த தருணத்தில் ஏதேனும் சாதிக்க வேண்டும் விருப்பம் ஏற்பட்டது. அதன் பிறகு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐஎஃப்எஸ் ஆனேன்.

சிவில் சர்வீ்ஸ் தேர்வு கடினமான தேர்வு அல்ல; இது சாதிக்க முடியாத தேர்வு அல்ல. பெரிய மதிப்பெண் பெற்று இருந்தால்தான் வெல்ல முடியும் என்பதல்ல. தேசப்பற்று, குடும்பப்பற்று யாருக்கெல்லாம் இருக்கிறதோ, நம் பெற்றோர் நம்மால் பெருமையடைய வேண்டும் என்ற ஆசை யாருக்கு இருக்கிறதோ, நான் நினைக்கும் மாற்றத்தை நான் கொண்டு வர வேண்டும் என்ற ஆசை யாருக்கு இருக்கிறதோ அவர்கள் இத்தேர்வை எளிதாக வெல்லலாம்.

உத்தரவு இடும் பதவிக்கு பெண்கள் வர வேண்டும். ஏதேனும் ஒரு வேலை கிடைத்தால் போதும் என பெண்கள் நினைக்கக் கூடாது. சில மாதங்களே உடுத்தும் ஆடைகளைகூட பார்த்து பார்த்து தேர்வு செய்யும் நாம், நம் எதிர்கால பணியை அறிவுடையதாக தேர்வு செய்வது அவசியம் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x