கிரெடிட் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறீர்களா?- எச்சரிக்கை, உங்கள் விபரம் இப்படியும் நூதனமாக திருடப்படலாம்

கிரெடிட் டெபிட் கார்டுகளை பயன்படுத்துகிறீர்களா?- எச்சரிக்கை, உங்கள் விபரம் இப்படியும் நூதனமாக திருடப்படலாம்
Updated on
2 min read

சென்னையில் ஜூஸ் கடை ஊழியர்கள் போல் பணியாற்றி வாடிக்கையாளர்களிடம் கிரெடிட், டெபிட் கார்டு விபரங்களை திருடி பணத்தை திருடிய 9 வட மாநில நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவின் கீழ் இயங்கிவரும் வங்கி மோசடி குற்றங்களை விசாரிக்கும் பிரிவில் கடந்த  சில நாட்களாக பெறப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் தொடர்பான புகார்களை ஆய்வு செய்ததில் பெரும்பான்மையான புகார்தாரர்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பெருங்குடியில் உள்ள Sp InfoTech (Global Infocity Park) என்ற ஐடி கம்பெனி இயங்கிவரும் இடத்தில் உள்ள ஜூஸ் ஐடி என்ற கடையில் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதை நீண்ட ஆய்வுக்குப் பின் போலீஸார் கண்டுபிடித்தனர்.

மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் பாலகிருஷ்ணன் இதுகுறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டதன்பேரில்  தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது. அதன் அடிப்படையில் கூடுதல் துணை ஆணையர் சரவணக்குமார் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து குற்றம் நடக்கும் இடமான பெருங்குடியிலுள்ள எஸ்.பி.இன்போடெக் வளாகத்தில் கண்காணித்து வந்தனர்.

அங்குள்ள ஜூஸ் ஐடி என்ற கடையில் விசாரண நடத்தியபோது அங்கு வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்குவதில்லை என்றும், வாடிக்கையாளர்கள் டெபிட் அல்லது கிரெடிட் மு்லம் மட்டுமே பணம் செலுத்தமுடியும் என்று அந்தக் கடையில் வேலை செய்யும் வட இந்தியர்கள் அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கூறியுள்ளனர். இதை நம்பிய வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியுள்ளனர்.

இதைப்பயன்படுத்தி அவ்வாறு கார்டு முலம் பணம் செலுத்துபவர்களின் கார்டுகளை தாங்கள் பிரத்தியோகமாக வாங்கி வைத்திருக்கும் ஸ்கிம்மர் என்ற  கருவி மூலம் கார்டுகளின் அனைத்து டேட்டாக்களையும் திருடி உள்ளனர். கார்டுகளை வாடிக்கையாளர் தரும்போதே அவர்கள் பதிவு செய்யும் ரகசிய பின் நம்பரையும் அவர்கள் அறியாமல் சேகரித்துள்ளனர்.

அவ்வாறு சேகரிக்கும் விபரங்களை செல்போன் மற்றும் லேப்டாப்பில் சேமித்து வைத்துள்ளனர் என்பது தெரியவந்தது,

உடனடியாக தனிப்படை புலன் விசாரணை அதிகாரிகள் ஆய்வாளர்கள் மீனாப்பிரியா, பிரியா உதவி ஆய்வாளர்கள் மோகன் வின்சென்ட் துரைராஜ், மற்றும் காவலர்கள் உதவியுடன் மேற்கண்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் பெயர், 1.ராகுல் சி 2.குந்தன் சி, 3.சுரேஷ்குமார், 4.ராகுல் குமார், 5.சுதிர், 6. பிரகாஷ்குமார், 7. குந்தன் குமார், 8.ராம்பீர் குமார், 9.விபின் குமார் ஆகிய 9 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து  லேப்டாப், ஸ்கிம்மர் கருவி, மொபைல் போன், டெபிட் கார்டுகள், இடிசி கருவிகள் மற்றும் ரூ.1.48 லட்சம் ரொக்கப்பணத்தை கைப்பற்றினர்.  விசாரணைக்குப்பின் குற்றவாளிகளை ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் பொதுமக்கள் அவ்வாறு நடக்கும் பரிவர்த்தனையை மற்ற கருவிகளில் மேற்படி கார்டுகளை பொருத்துகிறார்களா? என்று உன்னிப்பாக கவனிக்க வேண்டும். தங்கள் கண்முன்னர் கார்டுகளை ஸ்வைப் செய்ய அனுமதிக்க வேண்டும்.

மேலும் யாரிடமும் ஆதார் எண், ஒன் டைம் பாஸ்வர்ட் (ஓடிபி), கிரெடிட் டெபிட் கார்டிலுள்ள 16 இலக்க சிவிவி எண், கார்டுகளில் முடிவு காலம் போன்றவற்றை எக்காரணத்தைக் கொண்டும் பகிரக்கூடாது என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in