Published : 05 Jan 2019 02:08 PM
Last Updated : 05 Jan 2019 02:08 PM

பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்த கனிமொழி: காரணம் என்ன?

ஜனவரி 5- திமுக மகளிரணிச் செயலாளரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழிக்குப் பிறந்தநாள்.

 

வழக்கமாகத் தனது பிறந்தநாள் அன்று அப்பா கருணாநிதி, அம்மா ராஜாத்தி அம்மாளிடம் இருந்து ஆசி, அண்ணன் ஸ்டாலினிடம் இருந்து வாழ்த்து, தொண்டர்கள் அணிவகுப்பு, நலம் விரும்பிகளின் சந்திப்பு என சந்தோஷத்தில் திளைப்பார் கனிமொழி. குறிப்பாக சி.ஐ.டி. காலனி வீட்டில் தந்தை முன்னிலையில் கேக் வேட்டிக் கொண்டாடுவார் கனிமொழி. ஆனால் இந்த முறை எதுவும் இல்லை.

 

பிறந்தநாள் அன்று, வழக்கமாகச் சந்திக்கும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மாற்றுக் கட்சித் தலைவர்கள் என யாரையும் இந்தமுறை கனிமொழி சந்திக்கவில்லை.

அவர் வீட்டின் வெளியே, வழக்கமாக இசைக்கப்படும் செண்டை மேளம், நாட்டுப்புற கலைஞர்களின் தாரை, தப்பாட்டம், இன்னிசை வாத்தியங்கள் இசைக்கப்படவில்லை. வாழை மரங்கள், பூ மாலைகள், தி.மு.க. கொடி தோரணங்கள் ஆகியவை கட்டப்படவில்லை.

 

அதேபோல நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம், அன்னதானம் என வழக்கமாக நடைபெறும் எந்த நிகழ்வும் இன்று நடைபெறவில்லை. வழக்கமாக சி.ஐ.டி. காலனி மற்றும் ராதா கிருஷ்ணன் சாலை முழுவதும் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ், பேனர்கள் இந்தமுறை இல்லை.

 

பிறந்தநாளுக்கு 2 நாட்கள் முன்னதாகவே தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில், ''எனது பிறந்த நாளையொட்டி சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக அறிகிறேன். கழகத் தோழர்கள் இதனை கண்டிப்பாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எனது பிறந்த நாளை கொண்டாடும் எண்ணம் இல்லை. நண்பர்கள் இதை புரிந்துக் கொண்டு நேரில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்று பதிவிட்டிருந்தார் கனிமொழி.

என்ன காரணம்?

மூப்பின் காரணமாக கருணாநிதியின் உடல்நிலை மோசமாகி இருந்த நேரம். கடந்த ஜூன் மாதம் அவரின் 95வது பிறந்த நாளை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தார் கனிமொழி. அதில்,

'ஊர் கூடி வடமிழுக்கிறோம்...

தேர் நகரவில்லை.

கைகள் சோர்ந்து

நம்பிக்கை இற்று

விழுமுன் வா!

உன் கரகரத்த குரல்

வாளெடுத்து

எழுத்துக் கேடயம் ஏந்தி வா!

வீதிகளெங்கும் காத்திருக்கிறோம்

ரட்சகனுக்காக' என்கிற கனிமொழியின் வரிகள் தந்தை கருணாநிதியின் மீதான பாசத்தைக் காட்டின. அப்போது தேறி வந்த கருணாநிதி, ஆகஸ்ட் மாதம் மறைந்தார்.

பாசத்துக்குரிய தந்தை இல்லாமல் கனிமொழி எதிர்கொள்ளும் முதல் பிறந்தநாள் இது. இதனால் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தையும் தவிர்த்துவிட்டார் கனிமொழி. தான் அளிக்கும் பேட்டிகளில் கூட தந்தை குறித்த கேள்விகளைத் தவிர்த்து விடுகிறார். தந்தையின் நினைவாக இன்று காலை அவரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் கனிமொழி.

இது ஒருபுறமிருக்க, ஸ்டாலின் தலைமைக்கு எதிராக எதையும் செய்து அவரின் அதிருப்தியை சம்பாதித்துக்கொள்ள கனிமொழி விரும்பவில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x