Published : 09 Jan 2019 02:30 PM
Last Updated : 09 Jan 2019 02:30 PM

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு: வரும் 11-ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்; திருமாவளவன்

பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 11-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய சமூகத்தில் அனைத்து வகையிலும் முற்பட்ட வகுப்பைச் சார்ந்த பிராமணர், ராஜ்புத், ஜாட், பூமிகார், மராத்தா போன்ற சமூகப் பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கென பாஜக அரசு, பத்து சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்கிறது.

மேலும், மாநிலங்களவையிலும் இன்று அதனைத் தாக்கல் செய்து நிறைவேற்ற உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு பெறும் கடைசி நாளில் மக்களவையில் திடீரென பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்தது. மாநிலங்களவையை இதற்கென மேலும் ஒரு நாள் நீட்டிப்பு செய்துள்ளது. 

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் பாஜக அரசு இந்த மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. அதிமுக, திமுக, சமாஜ்வாதி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமே இதனை வெளிப்படையாக எதிர்த்துள்ளன. பிற எதிர்க்கட்சிகள் யாவும் இதை நேரடியாக எதிர்க்க இயலாமல், அரசியல் நெருக்கடியால் ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள அவலம் இங்கே அரங்கேறியுள்ளது. 

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பொதுப்பிரிவினர் யாவரும் பயன்பெற வேண்டும் என்கிற வகையில்தான், இச்சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என சொல்லப்படுகிறது. இட ஒதுக்கீடு என்பது வறுமையை ஒழிப்பதற்கான ஒரு திட்டமல்ல. சமூக அடிப்படையில் நீண்டகாலமாக இழிவுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாக்கப்பட்டு வரும் பல்வேறு சமூகப்பிரிவினர் யாவரும் அரசியல், சமூக, பொருளாதார விழிப்புணர்வைப் பெறுவதற்கும், சமூக இழிவுகள், சுரண்டல் மற்றும் ஒடுக்கு முறைகளிலிருந்தும் விடுபடுவதற்கேற்ற அதிகார வலிமையைப் பெறுவதற்கும் ஏதுவான வகையில் வரையறுக்கப்பட்ட ஒரு புரட்சிகர கோட்பாடு தான் சமூக நீதியாகும்.

எவர் ஒருவரும்  பொருளாதாரத்தில் உழைப்பின் மூலமாக மேம்பட்டுவிட முடியும். ஆனால், ஒருவரின் சமூகத் தகுதியை இவ்வாறு மேம்படுத்த இயலாது. கல்வியின் மூலமாகப் பெறும் சமூக விழிப்புணர்வின் அடிப்படையில் வெடித்தெழும் போராட்டங்களுக்குப் பின்னரே ஒட்டுமொத்த சமூகத்தின் சாதியமைப்பில் படிப்படியான மாற்றங்களை உருவாக்க முடியும். இந்தப் புரிதலின் அடிப்படையில் தான் சமூக நீதிக் கோட்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. இதுவே, சாதியின் பெயரால் பாதிக்கப்படுவோருக்கு இட ஒதுக்கீடு என்னும் செயல் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்தகைய சமூக நீதிக் கோட்பாட்டை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டுமென்று நீண்டகாலமாகப் போராடி வரும் சதிக்கும்பல், மிகவும் நுட்பமாக தற்போது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அவர்களின் நோக்கம் முற்பட்ட வகுப்பைச் சார்ந்த ஏழை எளியோரை மேம்படுத்துவது என்பதல்ல; மாறாக, சமூக நீதிக் கோட்பாட்டை அழித்தொழிப்பதே ஆகும். அதாவது, தற்போது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை ஒரு பிரிவினருக்கு நடைமுறைப்படுத்திவிட்டால், காலப்போக்கில் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த முயற்சியாகும். 

ஏற்கெனவே, இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 'க்ரீமி லேயர்' என்னும் பொருளாதார அளவுகோலை திணித்தவர்கள் தற்போது அதற்கும் ஒருபடி மேலாக பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு சட்டத்தையே கொண்டு வந்துவிட்டனர். இனி வருங்காலத்தில் பொருளாதார அடிப்படையில் மட்டுமே இட ஒதுக்கீடு என்கிற கோட்பாட்டை நிலைநிறுத்த இது வழிவகுக்கும். 

எனவே, சாதியை ஒழிப்பதற்கான சமூக நீதிக் கோட்பாட்டைக் காப்பாற்றுவதும் அதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் அனைத்து ஜனநாயக சக்திகளின் கடமை என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. 

இந்நிலையில், சமூக நீதியைக் காப்பாற்றவும் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையைத் திணிக்கும் சதிமுயற்சியை முறியடிக்கவும் ஏதுவாக, சமூக நீதி சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் வரும் 11.1.2019 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி அறைகூவி அழைப்பு விடுக்கிறது" என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x