Published : 21 Jan 2019 02:30 PM
Last Updated : 21 Jan 2019 02:30 PM

யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என்ற மூடநம்பிக்கையை ஸ்டாலின் நம்புகிறாரா? - ஓபிஎஸ் பேட்டி

யாகம் நடத்தினால் முதல்வராகலாம் என்ற மூடநம்பிக்கையை மு.க.ஸ்டாலின் நம்புகிறாரா என, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் இன்று (திங்கள்கிழமை) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

முதல்வர் பதவியை எதிர்பார்த்து தலைமைச் செயலக அலுவலகத்தில் நீங்கள் யாகம் வளர்த்ததாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே?

முதல்வராவதற்கு இப்படியொரு யாகம் நடத்தப்படலாம் என்றொரு நியதி இருந்தால், அதனால், முதல்வராக முடியும் என்ற சக்தி இருந்தால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அதற்குரிய யாகத்தை நடத்த வழியிருக்கிறது. ஸ்டாலின் இந்த மூடநம்பிக்கையை நம்புகிறாரா? யாகம் நடத்தினால், ஒவ்வொரு மாநில முதல்வராகவும், பிரதமராகவும் ஆக முடியுமா? ஸ்டாலின் இதுபோன்ற மூட நம்பிக்கைகளுக்கு புதிய அர்த்தம் கண்டுபிடிப்பது தேவையற்ற ஒன்று.

எனது அறை மற்றும் பக்கத்தில் உள்ள கருத்தரங்கு ஆகியவற்றைச் செப்பனிட்டுள்ளோம். தினந்தோறும் சாமி கும்பிட்டுதான் பணியைத் தொடங்குவேன். முதல்வர் பதவியை எதிர்பார்த்து நான் யாகம் நடத்தவில்லை.

நான் மூன்று முறை முதல்வராக இருந்திருக்கிறேன். இப்போது, துணை முதல்வராக இருந்து கட்சியில் ஒருவரை முதல்வராக்கிய பெருமை அதிமுகவுக்கு உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தான் அல்லாமல் வேறொருவரை முதல்வராக்கும் தைரியம் இருக்கிறதா?

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைப்பதால், நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்குப் பின்னடைவா?

பொதுவாகவே ஸ்டாலின் சமீபகலமாக என்ன செய்வதென்றே தெரியாமல் குழம்பிப் போயிருக்கிறார். கருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் 'சிவனே' என்றிருந்த ராகுல் காந்தியின் கையைத் தூக்கி இவர் தான் பிரதமர் என்றார் ஸ்டாலின். இன்று எதிர்க்கட்சித் தலைவர்களின் மேற்குவங்கக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். எந்தப் பக்கம் தாவினால் அரசியல் லாபம் கிடைக்கும் என ஸ்டாலின் குழம்பிப் போயிருக்கிறார். எவ்வளவு பெரிய கூட்டணி எங்களுக்கு எதிராக உருவானாலும் மக்கள் எங்கள் பக்கம் தான் இருக்கின்றனர். மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்கு அளிப்பார்கள்.

தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கிறாரே? அது அதிமுகவின் கருத்தா?

தம்பிதுரை தான் கூறும் கருத்துகளுக்கு எங்களிடம் உரிய விளக்கம் அளித்துக்கொண்டு இருக்கிறார். அதனை  அரசியலாக்க வேண்டாம். அவர் தன் மனதில் பட்டதைப் பேசுகிறார்.

இவ்வாறு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x