

தேசிய தூய்மை நகரங்களுக்கான மதிப்பீடு தொடர்பாக சென்னையின் தூய்மையை மத்திய அரசு அதிகாரிகள் இன்று மதிப்பீடு செய்கின்றனர்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் நாட்டில் உள்ள 4 ஆயிரம் நகரங்கள் தூய்மையான நகரங்களாக மாற்றப்பட வேண்டும் என்ற இலக்குடன், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் சார்பில், கடந்த 2014-ம் ஆண்டு தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது.
அதன்படி நாடு முழுவதும் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்களை தூய்மை நகரங்களாக மாற்ற மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது. அந்நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய கடந்த இரு ஆண்டுகளாக தூய்மை நகரங்களை மதிப்பிட்டு, சிறப்பாக செயல்பட்டு வரும் நகரங்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அதில் சென்னை மாநகராட்சிக்கு கடந்த 2017-ம் ஆண்டு 235-வது இடமும், கடந்த ஆண்டு 100-வது இடமும் கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு தூய்மை நகரங்களுக்கான மதிப்பீட்டு பணிகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அந்த அமைச்சகத்தின் இணை செயலர் நந்திதா குப்தா தலைமையிலான குழு சென்னை வந்துள்ளது. அக்குழு இன்று சென்னையின் தூய்மையை மதிப்பிட உள்ளது. ஆய்வின்போது மாநகரில் உள்ள வணிக வளாகங்கள், பொதுக் கழிப்பறைகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், குடியிருப்பு பகுதிகள், குடிசைப் பகுதிகள் ஆகியவற்றில் பராமரிக்கப்படும் தூய்மை நடவடிக்கைகள், மாநகராட்சியால் குப்பைகளை வகை பிரித்து பெறும் முறை, அதை மக்க செய்யும் முறை குறித்து பார்வையிட்டு மதிப்பிட உள்ளனர். அதன் பின்னர் தேசிய அளவில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசால் வெளியிடப்படும்.