

கோடநாடு விவகாரத்தில் என்னிடம் ஆவண ஆதாரங்கள் இல்லை என்று இதுதொடர்பான வீடியோவை வெளியிட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ கூறியுள்ளார்.
கோடநாடு விவகாரம் தொடர் பாக வீடியோ வெளியிட்ட தெஹல்கா ஊடகத்தின் முன் னாள் ஆசிரியர் மேத்யூ சாமு வேல், சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த பல தவறுகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறேன். ராபர்ட் வதேரா குறித்து செய்தி வெளியிட்டபோது எனக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக கூறினார்கள். இப்போது கோடநாடு தொடர்பாக வெளியான செய்தியை தொடர்ந்து எனக்கு பின்னால் திமுக இருப்பதாக கூறுகிறார்கள். எனக்கு எந்த அரசியல் பின்னணியும் கிடையாது. சயான், மனோஜ் இருவரையும் கைது செய்தபோது அவர்களை ஜாமீனில் எடுக்க 55 பேரிடம் உதவி கேட்டேன். அவர்களை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றத்தில் பிணை உத்தரவாதம் அளித்தவர்கள் திமுக வழக்கறிஞர்கள் என்பது எனக்கு தெரியாது. அவர்களுக்கான கட்டண தொகையை நான் எனது வங்கி கணக்கில் இருந்து செலுத்தி இருக்கிறேன்.
கோடநாடு விவகாரம் தொடர் பாக சயான், மனோஜ் ஆகியோர் பேசியதைத்தான் நான் வெளி யிட்டேன். கோடநாடு விவகாரத்தில் என்னிடம் வீடியோ ஆதாரங்கள் உள்ளன. ஆனால் ஆவணங்கள் வடிவில் எந்த ஆதாரமும் இல்லை. ஆவணப்படத்தில் வெளியிட்டது போக இன்னும் நிறைய வீடியோக் கள் என்னிடம் உள்ளன. ஆனால் அவற்றை வெளியிட வேண்டாம் என்று அதில் தொடர்புடையவர் களே கூறியதால் அவற்றை வெளியிடவில்லை. கோடநாடு விவகாரத்தில் விசாரணை நடத்திய காவல் துறை அதிகாரிகளின் பேட்டிகூட என்னிடம் உள்ளது. கோடநாடு விவகாரத்தில் இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் பேச பயப்படுகின்றனர்.
எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன. சயான், மனோஜ் வழக்கை விரைவில் உயர் நீதிமன்றத்தில் சந்திப்பேன். ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆணையம் சம்மன் அளித்தால் நேரில் ஆஜராக தயாராக இருக்கிறேன்
இவ்வாறு அவர் கூறினார்.