

புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நண்பர்கள் மோட்டார் சைக்களில் வீடு திரும்பிய போது, பின்னால் இருந்தவர் தவறி விழுந்தார். அவர் மீது லாரி ஏறியதில் பலியானார். நிற்காமல் சென்ற லாரியை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை திருமுல்லைவாயல் புத்துகோவில் தெருவைச் சேர்ந்தவர் சம்பத். இவரது மகன் தினேஷ் (18). பிளாஸ்டிக் கடையில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் ஜெகன் (19). அம்பத்தூரில் வசிக்கிறார், கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வெளியேச்சென்றனர். புத்தாண்டைக் கொண்டாடி விட்டு இருவரும் ஒரே பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
திருமங்கலம் பாலாஜி மருத்துவமனை அருகில் புழல்- தாம்பரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தை முந்தி சென்றனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த தினேஷ் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார்.
அப்போது வேகமாக பின்னால் வந்துக்கொண்டிருந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்று தினேஷ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தினேஷை மீட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே தினேஷ் உயிரிழந்தார். இதையடுத்து பைக்கை ஓட்டி வந்த ஜெகனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரி குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.