

போலீஸாரின் அவதூறுப் பேச்சால் தற்கொலை செய்துகொண்ட கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷின் மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
போலீஸார் பொதுமக்களைக் கனிவுடன் அணுகவேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பலமுறை போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுரை கூறி வந்துள்ளார். ஆனாலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகளிடம் போலீஸார் கடுமையாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில போலீஸார் செய்யும் இத்தகைய செயல்களால் பொதுவாக போலீஸார் மீது அதிருப்தி எழுகிறது. கடந்த ஆண்டு கால் டாக்ஸி ஓட்டுநர் மணிகண்டன் போக்குவரத்து போலீஸாரின் அவதூறுப் பேச்சால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அது நடந்து சில மாதங்களில் திருச்சியில் உஷா என்ற பெண் கணவருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் என்பவரால் துரத்தப்பட்டு பின்னர் கீழே விழுந்ததில் உயிரிழந்தார். இதுபோன்ற சம்பவங்கள் போலீஸாரின் மனநிலை குறித்து பொதுமக்கள் விமர்சிக்கும் அளவுக்குப் பெரிதானது.
இந்த இரண்டு விவகாரங்களையும் மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் உள்ளது. இந்நிலையில் சென்னை கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் போலீஸாரால் தான் தற்கொலை செய்துகொள்வதாகக் காணொலி வெளியிட்டு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த விவகாரமும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து செய்திகள் வெளியானதின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் சூமோட்டோவாக வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சென்னை மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில் கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி 4 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி டி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.