Published : 03 Jan 2019 12:43 PM
Last Updated : 03 Jan 2019 12:43 PM

சமூக நீதிக்காகப் பாடுபட்டவர் கருணாநிதி: அழகுத் தமிழ்ப் பேச்சில் வல்லமை பெற்றவர்: பேரவையில் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம்

சமூக நீதிக்காகப் பாடுபட்டவர் கருணாநிதி என, அவருடைய இரங்கல் தீர்மானத்தின் மீது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் புதன்கிழமை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. வரும் 8 ஆம் தேதி வரை கூட்டம் நடைபெறும் என, சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு. கருணாநிதியின் மறைவு குறித்த இரங்கல் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

அதன் விவரம்:

"94 ஆண்டுகள் வாழ்ந்து, தான் பிறந்த நாட்டுக்காகவும், தான் சார்ந்த கட்சிக்காகவும் அயராது உழைத்த மு.கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை.

மன உறுதியும், தன்னம்பிக்கையும் தன்னகத்தே கொண்டு விளங்கிய தலைவர். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், தமிழ்ப் பற்றாளர், பத்திரிகையாளர் ஆகிய பன்முகம் கொண்ட ஆற்றலாளர். திரைப்படத் துறையில் கோலோச்சியவர். பேச்சாற்றல் மூலம் தனது கட்சித் தொண்டர்களை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கக்கூடிய வல்லமை பெற்றவர் கருணாநிதி.

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவர்களும், அவருடைய அழகுத் தமிழுக்கு ஆட்பட்டவர்களாக விளங்கினார்கள்.

1947 ஆம் ஆண்டில், எம்ஜிஆர் நடித்த 'ராஜகுமாரி' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதத் தொடங்கி 'பராசக்தி', 'மனோகரா' என அவரது திரைப்பணி தொடர்ந்தது, பின்னர் 'பாசக் கிளிகள்', 'உளியின் ஓசை', 'பொன்னர் சங்கர்' என சொல்லிக்கொண்டே போகலாம். இறுதியாக, தொலைக்காட்சியில் ஸ்ரீராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான் என்ற சிறப்பான தொடரை எழுதினார். 

75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர். 15  நாவல்களையும் 20 நாடகங்களையும் படைத்தவர். தூக்குமேடை நாடகத்திற்காக எம்.ஆர்.ராதாவால் கலைஞர் என்று பட்டம் பெற்றவர்.

15 சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் படைத்தவர். தனது கட்சியினருக்கு உடன்பிறப்பே என்ற தலைப்பில் 7000-க்கும் மேற்பட்ட மடல்கள் தீட்டியவர். கேள்வி எழுப்பி அதற்குப் பதிலும் எழுதி, தனது கருத்துகளை உரக்க உரைக்க, அந்த கேள்வி பதில் பகுதியை கருவியாக்கிக் கொண்டவர்.  

கருணாநிதியின் சிறப்பான குணநலன்கள் குறித்து, ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்த்து பாராட்டலாம். அவரது ஓயாத உழைப்பையும், அந்த உழைப்பின் பயனாய் அவர் பெற்ற உயர்வையும் எண்ணி வியக்கிறோம்.

வயது முதிர்ந்த நிலையிலும், அதிகாலை எழுந்து, யோகா பயிற்சி, நடைப்பயிற்சி என உடற்பயிற்சி செய்வது, அப்பொழுதே அனைத்து நாளிதழ்களையும் படித்து முடிப்பது, முரசொலிக்கு கட்டுரை, கேள்வி பதில், மடல் என எழுதுவது, கட்சி அலுவலகத்திற்கு வந்து பணியாற்றுவது என அவர் ஒவ்வொரு மணித்துளியையும் வீணாக்காமல் பணி செய்த பாங்கு அனைவராலும் பாராட்டிப் பின்பற்ற வேண்டிய சிறப்புக்குரியதாகும்.

கருணாநிதி, மாணவப் பருவம்  முதலே அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தவர். தனது 15-வது வயதில் மாணவ நேசன் என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தியவர். இந்தி மொழியின் ஆதிக்கத்தைக் கடுமையாக எதிர்த்தவர்.  பல்வேறு போராட்டங்களை  முன்னின்று நடத்தியவர். சமூக நீதிக்காகப் பாடுபட்டவர். 

பெரியாரின் சீடராக குடிஅரசு இதழில் பணியாற்றி, திராவிடர் கழகத்தின் எழுத்தாளராக, பகுத்தறிவுப் பேச்சாளராக தமிழகம் முழுதும் உலா வந்தவர்.அண்ணா மீது அளவில்லா அன்பும், மரியாதையும் கொண்டு, அண்ணாவின் அன்புத் தம்பியாக பாசம் காட்டியவர். அண்ணாவின் ஆற்றல் மிகு தொண்டனாக பரிமளித்தவர்.

எம்.ஜி.ஆரையும், கருணாநிதியையும், அண்ணா, அன்புத் தம்பிகள் என்றே குறிப்பிடுவார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், தமிழகத்தின் முதல்வராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முக்கியப் பங்காற்றியவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் அரசியலைக் கடந்து சிறந்த நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

கருணாநிதியிடமும், அரசியல் ரீதியாக எம்.ஜி.ஆருக்கும், ஜெயலலிதாவுக்கும், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டு தலைவர்களுமே கருணாநிதி மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். 

கருணாநிதி முதல்வராக இருந்தபோது நான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இப்பேரவையில் பணியாற்றியிருக்கிறேன். அப்போது, இலங்கையில் தமிழர் பகுதிகளில் நடைபெறும் போரினால் அங்குள்ள தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின்மீது இதே அவையில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 11.11.2008 அன்று நான் பேசியதைக் குறிப்பிட்டு, மறுநாள் முரசொலியில் 'பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்' என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

மறுநாள் 12.11.2008  அன்று, அவையில் அதனைக் குறிப்பிட்டு நான் பேசினேன். அதற்குப் பதில் அளித்துப் பேசிய கருணாநிதி, பச்சைத் தமிழர் பன்னீர் செல்வம் அதற்காக கவலைப்படக்கூடாது. பச்சைத் தமிழர் என்று காமராஜருக்கு பெரியார்  பட்டம் கொடுத்தார். அதைத் தான் முரசொலி கொடுத்திருக்கிறது. அதுவும் முரசு அடித்துக் கொடுத்திருக்கின்றது என்று கூறியது பசுமையாக என் நினைவில் இன்றும் உள்ளது. 

சட்டப்பேரவை கொறடா, எதிர்க்கட்சி துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், போக்குவரத்து துறை அமைச்சர், முதல்வர் என பல்வேறு பதவிகளை வகித்த கருணாநிதி, இப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் தெளிவாகவும், சாதுர்யமாகவும், சிலேடையாகவும், நகைச்சுவையாகவும் பதில் அளிப்பதில் வல்லவர்.

2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது எம்எல்ஏ மைதீன்கான், விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். ஒருநாள் கேள்வி நேரத்தின்போது நான் அவரை சுட்டிக் காட்டி, அமைச்சரைப் பார்த்தால் மல்யுத்த வீரரைப் போலத் தெரிகிறார். உண்மையில் அவர் எந்த விளையாட்டு வீரர் என்று கேள்வி எழுப்பினேன். உடனே முதல்வராக இருந்த கருணாநிதி, அவர் அந்த மாதிரி விளையாட்டெல்லாம் விளையாட மாட்டார் என்று கூறிவிட்டு அமர்ந்துவிட்டார். இப்படி ஒரே வார்த்தையில் ஒரு கணத்தில் அவையையே கலகலப்பாக்கி விடும் திறமை படைத்தவர் கருணாநிதி.

சுதந்திர தினத்தன்று  மாநில முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர்.

கருணாநிதி உடல்நலக் குறைவாக இருப்பதை அறிந்து, கடந்த வருடம் ஜூலை மாதம் நானும், சக அமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து விசாரித்தோம். அவர் பூரண நலம் அடைய வேண்டும் என்ற எங்களது விருப்பத்தினையும் தெரிவித்தோம்.

அதன் பின்னர் சற்று உடல்நிலை தேறி வந்த கருணாநிதி, திடீரென கடந்த ஆகஸ்ட் மாதம் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து நாங்கள் அனைவரும் ஆற்றொணா துயரம் அடைந்தோம். அவருடைய இழப்பு நம் அனைவருக்கும், பேரிழப்பாகும், குறிப்பாக அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு இழப்பாகும்" இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இதையடுத்து, கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x