

கேரளத்தில் ஓணம் பண்டிகைக்காக, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து மூன்று நாளில் ரூ. 2 கோடிக்கு காய்கறிகள் அனுப்ப ஆர்டர்கள் குவிந்துள்ளன.
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை, கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. பத்து நாள்கள் நடக்கும் இந்த விழாவில், முக்கிய நிகழ்ச்சியான திருவோணம் 7-ம் தேதி கோலாகலமாக நடக்க அம்மாநிலத்தில் ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. விழா நடக்கும் நாள்களில் கேரள மக்கள் தங்கள் வீடுகளின் முன் அத்தப்பூக்கோலம் இட்டு, காய்கறி அலங்காரம் செய்து மகாபலி மன்னரை வரவேற்கின்றனர். விழா நடக்கும் 10 நாட்களும், சைவ உணவை மட்டும் சமைப்பதோடு, ஏழை, எளியோருக்கும் வழங்கி மகிழ்கின்றனர்.
80 சதவீதம் காய்கறிகள்
பொதுவாக, கேரள மாநிலத்துக்கு தேவையான ஒட்டுமொத்த காய்கறி, பூக்கள் தமிழகத்தில் இருந்துதான் அனுப்பப்படுகின்றன. தற்போது ஓணம் பண்டிகை என்பதால் வழக்கத்தைவிட அதிகமாக காய்றிகள், பூக்கள் அனுப்பப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்து 80 சதவீதம் காய்கறிகள் கேரளத்துக்கு அனுப்பப்படுகின்றன. ஓணத்தையொட்டி, தற்போது தினசரி 1,000 டன்கள் காய்கறிகள் வீதம் ரூ. 2 கோடிக்கு அனுப்ப வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளன. தக்காளி, கொத்த அவரைக்காய், வெண்டைக்காய், பீன்ஸ், வெங்காயம், மாங்காய், நெல்லிக்காய் ஆகியவை தற்போது கேரளத்துக்கு அதிக அளவு அனுப்பப்படுவதால் இவற்றின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் தங்கவேல் ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:
’’ஓணம் பண்டிகைக்காக, செப்டம்பர் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் அதிக அளவு காய்கறிகள் கேரளத்துக்கு அனுப்பப்படும். வழக்கமாக கேரளத்துக்கு 500 டன் காய்கறிகள் முதல் 1,000 டன் காய்கறி வரை அனுப்பப்படும். ஓணம் பண்டிகை நேரத்தில் விலை கூடுதலாகக் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் இரண்டு, மூன்று நாள் பறிக்காமல் மொத்தமாக பறித்து விற்பனைக்குக் கொண்டுவருவதால் காய்கறி வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லை. கிலோவுக்கு 2 ரூபாய் முதல் 5 ரூபாய் கூடுதலாகக் கிடைக்கிறது. தேவை அதிகமுள்ள காய்கறிகளுக்குத்தான் கூடுதல் விலை கிடைக்கிறது. ஒரு கிலோ பீன்ஸ் ரூ.40 பாய், தக்காளி ரூ.15, கொத்தவரை ரூ.25, மிளகாய் ரூ.25, மாங்காய், கிலோ ரூ.70-க்கு விற்கிறது. கேரட், உருளைக்கிழங்கு ஓசூர், மேட்டுப்பாளையத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. மாங்காய் ஆந்திரத்தில் இருந்து அனுப்பப்படுகிறது’’ என்றார்.