Published : 05 Jan 2019 08:44 AM
Last Updated : 05 Jan 2019 08:44 AM

இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 21-ம் தேதி வெளியீடு: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் முடியாததால், இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 21-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி கடந்த 2018 செப்டம்பர் 1 முதல் அக்டோபர் 31 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடந்தன. அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு மனுக்கள் பெறப்பட்டன. குறிப்பாக ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

அக்டோபர் 31 வரை விண்ணப்பங்கள் பெறப் பட்டன. தொடர்ந்து விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, கள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் 2019 ஜனவரி 4-ம் தேதி (நேற்று) வெளியிடப்படுவதாக இருந்தது.

இதற்கிடையில், கடந்த நவம்பர் 16-ம் தேதி கஜா புயல் தாக்கியதில் 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்பிரத சாகு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்பட்டிருக்க வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களின் தேர்தல் அதிகாரிகள் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை களுக்கு மேலும் சிறிது அவகாசம் கேட்டனர். மற்ற மாவட்ட அதிகாரிகளும் கூடுதல் அவகாசம் கேட்டதால், இறுதி வாக்காளர் பட்டியலை ஜனவரி 21-ம் தேதி வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி தவிர மற்ற அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் வரும் 21-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x