Last Updated : 28 Jan, 2019 09:19 AM

 

Published : 28 Jan 2019 09:19 AM
Last Updated : 28 Jan 2019 09:19 AM

உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும் கவலையில்லை: ஊழல்வாதிகளை நீதியின் முன்பு நிறுத்துவோம் - மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும், அவர்கள் உள்நாடு, வெளிநாடு என எங்கு இருந்தாலும் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மதுரை மண்டேலா நகரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஏழைகளுக்கு குறைந்த செலவில், எளிமையாக மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் தொலைநோக்குத்திட்டத்தின் கீழ் புதிய மருத்துவத்திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. 3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஒரு அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம்.

இதனால் மருத்துவ வசதிகள்பெருகுவதுடன், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் நேரடியாக மருத்துவ வசதிகளை ஏற்படுத்துவதுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்த நோய் வராமல் தடுக்கும் நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 41 லட்சம் கழிப்பறை

இந்த நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட தூய்மை இந்தியா திட்டம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. கிராமங்களில் 2014-ல் 38 சதவீதமாக இருந்த சுகாதாரம் இப்போது 98 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த கால கட்டத்தில் நாடு முழுவதும் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 41 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்கும் உழைத்து வருகிறோம். இந்த உழைப்பின் பலன் அனைத்து மக்களையும் சென்றடைய வேண்டும். 21-ம் நூற்றாண்டின் தேவையை மனதில் வைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை, நீர் வழிச்சாலை, விமானப் போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் என அனைத்துத் துறைகளின் மேம்பாட்டிலும் கவனம் செலுத்துகிறோம். 35 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்துக்கான திட்டங்கள்

நான்கரை ஆண்டுகளில் புதிய நெடுஞ்சாலை, ரயில் பாதையின் நீளம் 2 மடங்காக உயர்ந்துள்ளது. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறோம். ராமேசுவரம்-தனுஷ்கோடி ரயில் பாதை 1964-ம் ஆண்டு கோரப் புயலில் துண்டிக்கப்பட்டது. இப்பாதையை மீட்டெடுக்க 50 ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டது.

விரைவில் ராமேசுவரம்-தனுஷ்கோடிக்கு விரைவில் ரயில் பாதை அமைக்கப்படும். பாம்பனில் புதிய ரயில் பாலமும் அமைக்கப்படும். மதுரையில் இருந்து சென்னைக்கு அதிவேக தேஜஸ் ரயில் இயக்கப்படும். மதுரை உட்பட 10 ஸ்மார்ட் சிட்டி பணிகளும் நடைபெற்று வருகின்றன. முதல் அதிவிரைவு ரயிலான ‘டி-18’ தமிழகத்தில் விடப்பட்டுள்ளது. விரைவில் இந்தியா முழுவதும் "டி-18" ரயில் இயக்கப்படும்.

நாட்டின் சிறந்த கட்டமைப்புகளும், இணைப்பு திட்டங்களும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். தமிழகம் தொழில்துறையில் முன்னேறிய மாநிலம். மேக் இன் இந்தியா திட்டத்தில் தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்புத் துறையின் மையமாக தமிழகம் மாற்றப்படும். இதனால் பெரியளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தூத்துக்குடி துறைமுகம் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கப்பல் போக்குவரத்தில் தென்னிந்தியாவின் முக்கிய துறைமுகமாக தூத்துக்குடி மாற்றப்படும்.

விழிப்புடன் இருங்கள்

நாட்டில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு, கல்விக்கான வாய்ப்புகளை கொடுப்பதில் உறுதியாக உள்ளோம். அதை கருத்தில் கொண்டே கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கெனவே இடஒதுக்கீட்டுச் சலுகையை அனுபவித்து வரும் பிரிவினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

இருப்பினும், துரதிருஷ்டவசமாக சுயநலனுக்காக தமிழகத்தில் சிலர் 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்க்கின்றனர். இவர்களைப் போன்று எதிர்மறை சிந்தனையுள்ளவர்களிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் தங்களின் வாழ்வியல் ஆராய்ச்சியை தெரிவித்து சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை கவனிக்குமாறு எஸ்சி, எஸ்டி ஆணையம் மற்றும்மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை-டெல்லி வரை பதற்றம்

நாட்டில் ஊழல்வாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாட்டை கொள்ளையடித்தவர்கள், ஏமாற்றியவர்கள், சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் உள்நாடு, வெளிநாட்டில் இருந்தாலும் நீதியின் முன்பு நிறுத்தப்படுவது உறுதி.

இந்த நடவடிக்கை சென்னை முதல் டெல்லி வரை பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு ஒப்பந்தங்கள், பாதுகாப்பு விவகாரங்கள், மக்கள் திட்டங்களில் ஊழல் செய்தவர்கள் அதற்கான பலன்களை உணரத் தொடங்கி உள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் நாட்டின் காவலனான எனக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், எதிர்மறை போக்கு, அச்சம் காரணமாக அவர்கள் என்ன செய்தாலும் நான் ஏழைகளின் பக்கமே எப்போதும் நிற்பேன். மதுரை மக்களும், தமிழக இளைஞர்களும் எதிர்மறை சக்திகளை புறக்கணிக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x