Published : 25 Jan 2019 03:47 PM
Last Updated : 25 Jan 2019 03:47 PM

பாஜகவின் விருப்பப்படிதான் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை அரசு கையாள்கிறதோ? - வேல்முருகன் சந்தேகம்

பாஜகவின் விருப்பப்படிதான் அரசு ஊழியர்-ஆசிரியர் போராட்டத்தை அரசு கையாள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "அரசு ஊழியர்-ஆசிரியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நான்காவது நாளாக இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய ஓய்வூதியத்தை விடுத்து பழைய ஓய்வூதியம், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 9 கோரிக்கைகளுக்காக நீண்ட காலமாகவே போராடிவருகிறார்கள். அண்மையில் 'கஜா' புயல் காரணமாக ஒத்திவைத்த போராட்டத்தைத்தான் கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் தொடங்கினர். மொத்தம் 9 லட்சம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் லட்சம் பேருக்கு மேல் கடந்த மூன்று நாட்களில் கைது செய்யப்பட்டனர். அரசு எங்களை அழைத்துப் பேச வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தைத் தொடர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்கிறார்கள்.

ஆனால் அரசோ, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சட்டப்பிரிவு 17 பி-ன் கீழ்  அவர்கள் மீது நடவடிக்கைக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பணிக்கு வராத ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கவும் அரசாணை வெளியிட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் நாட்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது.

இதற்கிடையில், இந்தப் போராட்டத்தை ஒடுக்கிவிடும் நோக்கில், அதற்கெதிராக 11 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பெயரில் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது அரசு; அதில், போராடும் ஆசிரியர்கள் 25 ஆம் தேதி அதாவது இன்று வெள்ளிக்கிழமைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக் குழு ஆலோசனை நடத்தியது. அதில் பெரும்பான்மை நிர்வாகிகளின் கருத்திற்கிணங்க தங்களின் போராட்டம் தொடரும் என்றே முடிவு செய்தனர்.

இப்போது, போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்குப் பதிலாக தற்காலிக ஆசிரியர்களை ஈடுபடுத்தச் சொல்லும் அரசாணைப்படி, ரூ.7,000 சம்பளத்தில் அவர்களை நியமிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது அரசு. அதன்படி, போராடும் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை ஜனவரி 26 அதாவது நாளை முதல் தொடங்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் தமிழக பாஜகவின் இளைஞரணித் தலைவர் என்று ஒருவர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்குப் பதிலாக பாஜக இளைஞர்களாகிய தங்களை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று அரசிடம் தெரிவித்திருக்கிறார். இதனை எப்படி விட்டுவைத்திருக்கிறது அரசு? அந்த பாஜக இளைஞரணித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு என்னதான் பயம்?

இதையெல்லாம் பார்க்கும்போது, பாஜகவின் விருப்பப்படிதான் அரசு ஊழியர்-ஆசிரியர் போராட்டத்தை அரசு கையாள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆக மொத்தத்தில், அரசு ஊழியர்-ஆசிரியர் போராட்டத்தை அரசு அணுகும் முறை சரியில்லை என்பதும் இதனால் தெளிவாகிறது. இந்த்த் தவறைத் திருத்திக்கொள்ள வேண்டியது அரசின் கடமை. பாஜகவுக்கு அடிபணிவதென்பது அதற்குப் பலியாவதுதானே தவிர வேறில்லை. எனவே அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஆகவே தமிழக மக்களின் குரலை இங்கு பிரதிபலிக்கிறோம். ஓய்வூதியத்தைப் பறித்ததென்பது எஞ்சிய கடைசிக்கால வாழ்வுரிமையையே பறித்ததாகும். மக்களைக் காக்க வேண்டிய அரசே இதைச் செய்ததென்றால், இதைவிடக் கொடுமை வேறேது? எனவே நீண்டகாலமாகவே போராடிவரும் அரசு ஊழியர்-ஆசிரியர்களிடம் பேசி, பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x