

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை பெரும்பாலான அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு:
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து அறிவித்திருக்கும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முடிவை அனைவரும் வரவேற்பார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் இணைத்து காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே நாளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: கஜா புயல் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கட்சிகளின் வேண்டுதல்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியின் களநிலவர அறிக்கையின்படி தேர்தலை தள்ளிவைத்தது வரவேற்கத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காமல் பரிதவித்து வரும் நிலையில், மக்களது கருத்துக்களுக்கு பின்னர் அத்தொகுதி தேர்தலை ஒத்தி வைத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆய்வுகளையெல்லாம் முன்கூட்டியே மேற்கொள்ளாமல் தேர்தலை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையத்தின் மீது விழுந்துள்ள கரும்புள்ளியாகும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்: மக்கள் யாரும் தேர்தல் வேண்டும் என்று கேட்கவில்லை, வேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஜனநாயக நாட்டில் தேர்தல் என்பது ஒரு கேலிகூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பது கண்டிக்கத்தக்கது.
அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: இது ஜனநாயக நடைமுறைகளை கேலிக்கூத்தாக்குவதாகும். திருவாரூ ரில் அமமுக வெற்றி பெறும் என்ற கள யதார்த்தத்தை உணர்ந்தே இந்த விஷயத்தில் அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன.
விசிக தலைவர் திருமாவளவன்:
திருவாரூர் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக மக்களிடையே கேள்விக் குள்ளாகி இருக்கும் தனது நம்பகத்தன்மையை மீட்பதற்கான நடவடிக்கைகளை இனிமேலாவது தேர்தல் ஆணையம் எடுக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:
திருவாரூர் தேர்தலை இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்தி ருப்பது வரவேற்கத்தக்கது. வரும் நாட்களிலே மக்களின் மனநிலைக்கு ஏற்ப தேர்தல் உரிய காலத்தில் முறையாக நடக்க வேண்டும்.
சமக தலைவர் சரத்குமார்: இன்றைய அரசியல் சூழலில் இத்தேர்த லின் முடிவு, சில மாதங்களில் வரவிருக் கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான அக்னிப் பரிட்சையாக இருக்கும். இதனால், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து என்பது சில கட்சிகளுக்கு தற்காலிக நிம்மதி அளிப்பதாக இருக்கும்.
கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்ட திருவாரூர் தேர்தலை, கஜா புயல் நிவாரண பணிகளை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் நிறுத்தி இருக்கிறது. இந்த நிலை தொடருமென்றால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது.
மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: திருவாரூர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது வரவேற்கத்தகக்து. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.