அஜித்தை நாங்கள் அழைக்கவேயில்லை: தமிழிசை விளக்கம்

அஜித்தை நாங்கள் அழைக்கவேயில்லை: தமிழிசை விளக்கம்
Updated on
1 min read

நடிகர் அஜித்தை பாஜக அழைக்கவில்லை; அஜித்தின் விளக்கமும் எனக்கான பதிலடி இல்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் விளக்கமளித்திருக்கிறார். 

அண்மையில் திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜகவில் அஜித் ரசிகர்கள் சிலர் இணைந்தார்கள் என்று செய்தி வந்தது. தொடர்ந்து, தமிழிசை சவுந்தர்ராஜன், அஜித்தையும், அஜித் ரசிகர்களையும் நேர்மையானவர்கள் என்று பாராட்டிப் பேசியிருந்தார். இதனால் அஜித்துக்கு பாஜக அழைப்பு என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அஜித் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், " எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்‌ ஈடுபாட்டில்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை..

நான்‌ சினிமாவில்‌ தொழில்‌ முறையாக வந்தவன்‌. நான்‌ அரசியல்‌ செய்யவோ, மற்றவர்களுடன்‌ மோதவோ இங்கு வரவில்லை. என்‌ ரசிகர்களுக்கும்‌ அதையேதான்‌ நான்‌ வலியுறுத்திகிறேன்‌. அரசியல்‌ சார்ந்த எந்த ஒரு வெளிப்பாட்டை நான்‌ தெரிவிப்பதில்லை. என்‌ ரசிகர்களும்‌ அவ்வாறே இருக்க வேண்டும்‌ என விரும்புகிறேன்‌" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "நடிகர் அஜித்தை பாஜகவுக்கு அழைக்கவில்லை. திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் தங்களை அஜித் ரசிகர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்ட 2000-க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தனர். அஜித் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆனால் அவரது அறிக்கைக்கு பாஜக அழைப்புக்கு அஜித் பதிலடி என்ற கோணத்தில் அர்த்தம் சொல்லப்படுகிறது.

அஜித் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்திருக்கிறது வரவேற்கத்தக்கது. ஆனால், அவர் அவருடைய ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை?

அஜித்தின் அறிக்கை பிரமாதமாக வடிவமைத்திருக்கிறார். மற்ற நடிகர்கள் மாதிரி இல்லாமல் அவர் அவரது நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அஜித் அறிக்கை தமிழிசைக்கு பதிலடி என்று சொல்லப்படுகிறது. அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. இது எனக்கான பதிலடியெல்லாம் இல்லை. நாங்கள் அஜித்தை அழைக்கவும் இல்லை.

நான் ஒரு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய அஜித் உதவி செய்தார். அப்படிப்பட்ட நல்ல மனிதர் அவர். அதனால், அவரையும் அவரது ரசிகர்களையும் நான் பாராட்டினேன்." என்று கூறினார்." என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in