Published : 29 Jan 2019 03:19 PM
Last Updated : 29 Jan 2019 03:19 PM

ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஓயாது பாடுபட்டவர்: ஸ்டாலின் புகழாஞ்சலி

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஓயாது பாடுபட்டவர் மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட இரங்கல் செய்தியில், "முன்னாள் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சரும், மூத்த தொழிற்சங்கத் தலைவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் மறைந்து விட்டார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரது மறைவுக்கு திமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

சோசலிச உணர்வுகளின் ஊற்றுக்கண்ணாகத் திகழ்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸின் ரயில்வே தொழிற்சங்க வேலை நிறுத்தம் இன்றைக்கும் தொழிலாளர்கள் மனதை விட்டு அகலாத ஒரு பசுமையான புரட்சிகர வரலாற்று நிகழ்வு. நெருக்கடி நிலையை எதிர்த்து கடுமையாகப் போராடிய அவர், தமிழகத்தில் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற திமுக ஆட்சியில் ஜனநாயகக் காற்றைச் சுவாசித்தவர் மட்டுமல்ல - தலைவருக்கு இறுதிவரை உற்ற நண்பராக இருந்தவர்.

பிறகு கைது செய்யப்பட்ட அவர் சிறையிலிருந்தவாறே மக்களவைக்கு அமோக மக்கள் ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரதமர் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் தொழில் துறை அமைச்சரானவர். பிறகு வி.பி.சிங் அமைச்சரவையில் ரயில்வே துறை அமைச்சராகவும், வாஜ்பாய் அமைச்சரவையில்  பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று சிறப்பாகப் பணியாற்றியவர். கார்கில் போரில் இந்திய வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் என்பதை யாரும் மறந்திட இயலாது.

ஏழைகளுக்காகவும், தொழிலாளர்களுக்காகவும் வர்க்க உணர்வுடன் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், தன் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஓயாது பாடுபட்டவர். அவர் விட்டுச் சென்றுள்ள மகத்தான பணிகள் தொழிலாளர் வர்க்கம், அடித்தட்டு மக்கள், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டோர் மத்தியில் என்றைக்கும் நீங்காப் புகழுடன்  நிலைத்திருக்கும்.

மாபெரும் மக்கள் தலைவர் ஒருவரை இழந்து தவிக்கும் அவரது உறவினர்களுக்கும், தொழிலாளத் தோழர்களுக்கும், சோசலிச சிந்தாந்த ஆர்வலர்களுக்கும் எனது ஆறுதலையும்,  இரங்கலையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

திமுகவின் சார்பில், டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவார்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x