

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சிலைகள் மாயமான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள சிலைகள் மாயமாகி உள்ளதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் ஆஜராகி, “இந்த வழக்கில் தொடர்புடைய கூடுதல் ஆணையர் திருமகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பூஜையின் போது செயல் அலுவலர் இல்லை எனக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 3 இணை ஆணையர் புகார் கொடுத்தும் கூடுதல் ஆணையர் திருமகள் மீது மட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பினர்.
“இதுதொடர்பாக அறநிலையத் துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்” என்றனர்.
பின்னர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கோயிலை இடித்து கும்பகோணம் டிகிரி காபி கடை கட்டியது தொடர்பான வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞர் மகாராஜா ஆஜராகி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் தொடர்புடைய அறநிலையத் துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், நில அளவையர் என அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும்” என உத்தரவிட்டனர்.
புகைப்பட தடைக்கு ஆலோசனை
ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் புகைப்படம் எடுக்க அனுமதியளிப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், “கோயில்கள் ஒன்றும் சுற்றுலாத் தலங்கள் அல்ல. இறைவனை வழிபடும் இடத்தில் சிலைகளை புகைப்படம் எடுக்க தடை விதிக்கும் நேரம் வந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக அனைத்து கோயில்களிலும் புகைப்படம், வீடியோ எடுக்க தடை விதிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்படும்” என கருத்து தெரிவித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.