Published : 29 Jan 2019 10:59 AM
Last Updated : 29 Jan 2019 10:59 AM

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 ஊர்களில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறப்பு

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 ஊர்களில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், சென்னை, வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் அமைந்தகரை, சாலிகிராமம் மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இந்த பாஸ்போர்ட் மையங்கள் உள்ளன. இந்நிலையில், மேலும் 7 ஊர்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இதன்படி, சென்னை ராஜாஜி சாலையில் உள்ள தலைமை பொது அஞ்சல் நிலையம், காஞ்சிபுரம் ரயில் நிலைய சாலை, திருவள்ளூர் ஜேஎன் சாலை, ராணிப்பேட்டை ஆற்காடு சாலை, ஆரணி சூரியகுளம் வடக்குத் தெரு, கள்ளக்குறிச்சி காந்தி சாலை, தருமபுரி நாச்சி யப்பா தெரு ஆகிய இடங்களில் உள்ள தலைமை அஞ்சல் நிலையங்களில் இந்த பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பொதுமக்கள் இந்த பாஸ்போர்ட் மையங்களில் பாஸ்போர்ட் பெற முதலில் www.passportindia.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று பதிவு செய்து நேர்காணலுக்கான தேதி மற்றும் நேரத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், தேர்வு செய்யப்பட்ட பாஸ்போர்ட் சேவை மையத்துக்குச் சென்று நேர்காணலில் பங்கேற்று பாஸ்போர்ட் பெறலாம்.

மேலும், புதிய பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய மற்றும் காலாவதியான பாஸ்போர்ட்டுகளுக்கு பதிலாக புதிய பாஸ்போர்ட்டுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

அதே சமயம், தட்கல் பாஸ்போர்ட் பெற, வழக்கம்போல் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த பாஸ்போர்ட் சேவை மையங்களின் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x