

'கருணாநிதி' என்ற வடமொழி பெயரை மாற்றிக்கொள்ளாதது குறித்து நிகழ்ச்சி ஒன்றில், திமுக தலைவர் கருணாநிதி பேசினார்.
தென்சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது:
"திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்துவதற்கு தன்னுடைய பகுதியை மேலும் மேலும் வளர்ப்பதற்கு நம்முடைய அன்பழகனைப்
போன்றவர்கள் இந்த இயக்கத்திலே நிறைய பெயர் பெற்றிருக்கிறார்கள். என் அருகில் அமர்ந்திருக்கின்ற கழகத்தின் பொதுச் செயலாளர் 'அன்பழகன்' என்ற பெயருக்குரியவர். அந்தப் பெயரைக் காப்பாற்றுகின்ற வகையில் அன்பழகன் என்ற பெயர் சூட்டப்பட்டவர்கள் நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு.
ஏனென்றால் அந்தப் பெயரைத் தேர்வு செய்வதற்கு, திராவிட இயக்கத்திற்கு ஏற்பட்டுள்ள அந்தத் துணிவை, மற்ற இயக்கங்கள் பெறவில்லை. காரணம் திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றுதான் தனக்கு தங்கள் பெற்றோர் இட்டப் பெயரை, உற்றார் உறவினர்கள் சூட்டிய பெயரை அதிலே தமிழ் உணர்வு இல்லை, தமிழர்களுடைய இனமான உணர்வு இல்லை, பகுத்தறிவு உணர்வு இல்லை என்ற காரணங்களால் அவற்றை மாற்றிக் கொண்டு, தாங்கள் விரும்புகின்ற பெயர்களில் அன்பழகன் என்றும், என்னுடைய பெயரும் அந்தக் குடும்பத்திலே இருக்கிறது.
'கருணாநிதி' என்பதிலே என்ன தான் உணர்வு இருந்தாலுங்கூட, அது வடமொழி பெயர். நானே சொல்லிக் கொள்கிறேன். அது வடமொழி பெயராக இருந்த காரணத்தால், திராவிட இயக்கம் தோன்றியபோது, திராவிட இயக்கத்திலே தமிழ்ப் பெயர்களை நாம் வைத்துக் கொள்ள
வேண்டும் என்றெல்லாம் விரும்பி பாடுபட்ட குடியேற்றம் அண்ணல்தங்கோ போன்றவர்கள் என்னைச் சந்தித்த போதும், எனக்கு மடல்கள் எழுதிய போதும் என் பெயரை 'அருள் செல்வர்' என்று மாற்றிக் கொள்ள வேண்டுமென்று சொன்னார்கள். அதை நான் விரும்பவில்லை. காரணம், அருள்செல்வன் என்றால் அது ஏதோ ஒரு துறவியின் பெயர் போல இருக்கிறது என்பதற்காக நான் அதை விரும்பவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை.
அண்ணாவிடம் கேட்டேன், பெயரை மாற்றிக் கொள்ளச் சொல்லி அண்ணல்தங்கோ எழுதியிருக்கிறாரே அண்ணா, என்ன செய்வது என்றேன். அண்ணா சொன்னார். இந்தப் பெயர் பழகி விட்டது, எல்லோருக்கும் தெரிந்த பெயராக ஆகி விட்டது. அதை மாற்றி, எந்தப் பெயரை இப்படி மாற்றியிருக்கிறோம் என்று வேறு ஒரு புதிய பெயரை வேலையற்றுப் போய்ச் சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை, உன்னுடைய பெற்றோர் வைத்த பெயரே இருக்கட்டும் என்று அண்ணா சொன்ன காரணத்தால், அண்ணா
சொன்னதற்கு வேறு மாற்றுச் சொல் இல்லை என்று என்றைக்கும் கருதுகிற நான், அன்றைக்கும் ஏற்றுக் கொண்டு, 'கருணாநிதி'யாகவே இருந்து விட்டேன். கருணாநிதியாகவே இறுதி வரை இருப்பது என்ற உணர்வோடு இருந்தேன். இன்றைக்கும் இருக்கிறேன். என்றைக்கும் இருப்பேன் என்ற அந்த உறுதியை உங்களுக்கெல்லாம் நான் வழங்குகிறேன்" என்றார் கருணாநிதி.