

அரசு ஊழியர்கள் எங்களுக்கு நண்பர்கள் எனவும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க இயலாத நிலைமையில் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், அரசு ஊழியர்கள் - அசிரியர்களின் கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "முதல்வர் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீதம் உள்ள 5-10% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும். பலகட்டங்களில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம்.
7-வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்திய பிறகு, நிதி நெருக்கடியிலும் 14,500 கோடி மதிப்பில் ஊதிய சலுகைகள் வழங்கப்பட்டன. மற்ற மாநிலங்கள் அவ்வாறு செய்யவில்லை.
நிதி நிலைமையைப் பொறுத்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களின் கோரிக்கைகளை ஏற்க இயலாத நிலையில் இருக்கிறோம். அரசு ஊழியர்கள் எங்களுக்கு நண்பர்கள். அரசுக்கு இதயம் போன்றவர்கள்" என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.