Published : 09 Jan 2019 10:19 AM
Last Updated : 09 Jan 2019 10:19 AM

சென்னை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் பறித்த போலி பெண் மருத்துவர் கைது: போலீஸார் தீவிர விசாரணை

சென்னை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் பறித்த போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் லட்சுமி (63). இவரது மகன் ராமலிங்கம் (34). இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 28-ம் தேதி தனது மகனை சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் லட்சுமி சேர்த்துள்ளார்.

அப்போது மருத்துவமனையில் மருத்துவர் சீருடையில் இருந்த இளம் பெண் ஒருவர் அவருக்கு உதவியுள்ளார். தொடர்ந்து உங்களது மகனுக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும். அதற்கு ரூ.800 கட்ட வேண்டும் என கூறி லட்சுமியிடமிருந்து பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். அதன் பிறகு அவர் மாயமானார்.

இந்நிலையில், தன்னிடம் பணம் பறிக்கப்பட்டது குறித்து லட்சுமி மற்றொரு மருத்துவரான ரமேஷ் என்பவரிடம் நேற்று காலை 11 மணிக்கு இதுகுறித்து புகார் செய்தார். அப்போது, சம்பந்தப்பட்ட இளம் பெண் அதே மருத்துவ உடையில் அதே வழியாகச் சென்று கொண்டிருந்தார். அவரைப் பிடித்து சென்னை அரசு பொது மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில் பிடிபட்டவர் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மணவூர் கிராமத்தைச் சேர்ந்த ஷர்மிளா (26) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மருத்துவர் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

அவரிடமிருந்து போலி மருத்துவர் அடையாள அட்டை, ஸ்டெத்தாஸ்கோப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஷர்மிளா இதேபோல் வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளாரா? என்று அவரை கைது செய்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x