Published : 28 Sep 2014 10:22 AM
Last Updated : 28 Sep 2014 10:22 AM

ஜெ. தீர்ப்பின் எதிரொலி: தமிழத்தில் பரவலாக மக்கள் அவதி

பஸ்கள் மீது கல்வீச்சு

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெய லலிதாவுக்கு எதிராக வெளியான தீர்ப்பை கண்டித்து அக்கட்சி தலைமைச் செயலகம் அருகே அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பஸ்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. இந்த தீர்ப்பை எதிர்பார்த்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமைச் செயலகத்தில் குழுமியிருந்தனர். காலை 11.30 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். ஜெயலலிதாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். பட்டாசுகளை வெடித்து லட்டுகளை விநியோகிக்கத் தொடங்கினர். மேளமும் இசைக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதாக செய்தி வெளியானதும் அங்கு குழுமியிருந்த அதிமுக தொண்டர்கள் ஆவேச மடைந்தனர். திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியன் சுவாமி ஆகியோரது உருவ பொம்மைகளை தீ வைத்து கொளுத்தினர். பெண்கள் துக்கம் தாளாமல் தேம்பி தேம்பி அழுதனர்.

இதற்கிடையே மாநில சமூக நல வாரியத்தலைவர் சி.ஆர்.சரஸ்வதி மற்றும் தலைமைக்கழக பேச்சாளர் பாத்திமா பாபு தலைமையில் அதிமுக தொண்டர்கள் திடீரென்று லாயிட்ஸ் சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த பஸ்கள் மீது கற்களை வீசினர். இதனால் பயந்துபோன பயணிகள் அலறியடித்துக்கொண்டு பஸ் களை விட்டு இறங்கி ஓடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில் மறியலால் பயணிகள் அவதி

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வுக்கு எதிராக வெளியான நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பயணிகள் பாதிக்கப் பட்டனர். ஜெயலலிதாவுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் அதிமுக தொண்டர்கள் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். குறிப்பாக, தாம்பரம், பழவந்தாங்கல், ஆம்பூர், ஆவடி, திருநின்றவூர், தாம்பரம், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர் உட்பட பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

வெளியூர் பேருந்துகள் நிறுத்தம்

சென்னை கோயம்பேட்டில் வெளியூர், வெளி மாநிலப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதியடைந்தனர்.

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிமுகவினர் நேற்று சாலை மறியல், ரயில் மறியல், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். சென்னையில் மாநகரப் பேருந்துகளின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. போதிய பேருந்துகள் இல்லாததால் பேருந்து நிலையங்களிலும் நிறுத்தங்களிலும் ஏராளமானோர் காத்திருந்தனர். மக்கள் வீடு திரும்ப முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர்.

பயணிகளின் பாதுகாப்பு கருதி கோயம்பேட்டில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், கோவை, பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் பெரும்பாலான விரைவு பஸ்கள் நிறுத்தப்பட்டன. விழுப்புரம், கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.

ஆந்திர, கர்நாடகப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் திடீரென நிறுத்தப்பட்டன. பெங்களூருக்கான பேருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கானோர் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையம் வந்து காத்திருந்தனர். பேருந்துகள் செல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வீடு திரும்பினர். பல இடங்களில் பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

திரையரங்குகளில் காட்சிகள் ரத்து

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் நேற்று பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு, சாலை மறியல் போன்ற சம்பவங்கள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் மாலை மற்றும் இரவு நேர திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இது குறித்து தமிழ்நாடு திரைப்பட அதிபர் சங்க செயலாளர் பன்னீர்செல்வம் கூறும்போது, “தற்போதைய சூழ்நிலை காரணமாக திரையரங்குகளில் இன்று (27.09.14) மாலை மற்றும் இரவு ஆகிய இரண்டு காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

கேபிள் டிவி

இதேபோன்று சென்னை உட்பட பல இடங்களில் கேபிள் டிவிகளின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதனால் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பான செய்திகளைப் பார்க்க முடியாமல் மக்கள் தவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x