Published : 11 Jan 2019 11:29 AM
Last Updated : 11 Jan 2019 11:29 AM

கந்துவட்டிக் கொடுமையால் விஷம் குடித்த பெண்; சமூக வலைதளங்களில் வைரலாகும் வாக்குமூலம்

கந்துவட்டிக் கொடுமையாமல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் ஒருவர், மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). உள்ளூரில் உள்ள கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருந்தவர், தற்போது மதுரை பசுமலை வங்கியில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி மாரீஸ்வரி (44). இவர்களுக்கு தமிழரசி (24), ரேணுகா பாரதி (17) ஆகிய இரு மகள்கள், மகன் பாலமுருகன் (22) (தச்சுத்தொழிலாளி) ஆகியோர் உள்ளனர். இதில், தமிழரசிக்குத் திருமணம் முடிந்து திருப்புவனம் நாடார் தெருவில் வசிக்கின்றார்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மகள் தமிழரசி வீட்டுக்கு சென்ற செந்தில்குமாரையும், அவரது மனைவியையும் கந்துவட்டிக்காரர் திருப்புவனம் பன்னீர்செல்வம் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பணத்தைக் கொடு இல்லையேல் விஷம் குடித்து செத்துவிடுங்கள் எனக்கூறியுள்ளார். பணத்தைக் கொடுக்காவிட்டால் உன் கணவரைக் கொல்லாமல் விடமாட்டேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதில் மனமுடைந்த செந்தில்குமார், மாரீஸ்வரி ஆகியோர் லாடனேந்தல் வீட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். பின்னர் அறைக்குள் சென்ற மாரீஸ்வரி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதற்கு முன்னர் மரண வாக்குமூலம் போல் செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை அறிந்த அவரது மகள் நீதி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதில், கந்துவட்டிக் கொடுமையால்தான் மாரீஸ்வரி தற்கொலை செய்துகொள்ளப்போகிறேன் எனவும், அதற்கு கந்துவட்டிக் கொடுமைக்காரர்கள் பன்னீர்செல்வம், கீதா, பானுமதி, மதுரை சதீஷ்குமார் ஆகியோர் தான் காரணம் எனவும், இவர்கள் மீது திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அழுதுகொண்டே பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து அவரது கணவர் செந்தில்குமாரிடம் கேட்டபோது கூறியதாவது: ''திருப்புவனத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்திடம் 9 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1 லட்சம் கடன் வாங்கினேன். அதற்காக இதுவரை ரூ.6 லட்சம் வரை வட்டி கட்டியுள்ளேன். இன்னும் ரூ.6 லட்சம் அசல் பாக்கி உள்ளது, அதனைக் கட்ட வேண்டும் என கொடுமைப்படுத்துகின்றனர். அதேபோல், லாடனேந்தலைச் சேர்ந்த கீதா, பானுமதி ஆகியோரிடம் என் மனைவி கடன் வாங்கியுள்ளார். அதற்கும் தலா ரூ.5 லட்சம் வரை வட்டி கட்டியுள்ளார். அதேபோல், மதுரையைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரிடம் நான் ரூ.1 லட்சம் கடன் வாங்கினேன். அவருக்கும் ரூ.4 லட்சத்திற்கு மேல் வட்டி கட்டியுள்ளேன். 

இவர்கள் அனைவரும் கந்துவட்டிக் கொடுமை செய்வதுடன், தரக்குறைவாகவும், மிரட்டினர். இதில் பன்னீர்செல்வம், கடந்த ஞாயிற்றுக்கிழமை தரக்குறைவான வார்த்தைகளில் திட்டியதுடன், பணம் கொடு, இல்லையேல் செத்துவிடுங்கள், செத்துவிட்டால் அந்தப் பணத்தை கழித்துக்கொள்கிறேன் என மிரட்டினார். மேலும் என்னை ஆள் வைத்து அடித்துவிடுவதாக மிரட்டியதாலும் பயந்த என் மனைவி ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்துள்ளோம். தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளார்.

இதுதொடர்பாக எனது மகள் திருப்புவனம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. கந்துவட்டிக்காரர் பன்னீர்செல்வத்திற்கு அரசியல் மற்றும் காவல்துறை  அதிகாரிகளிடம் செல்வாக்கு உள்ளதால் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், மதுரையில் ஐ.ஜி., அலுவலகத்திலும் கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை கோரி புகார் தெரிவித்துள்ளோம். காவல்துறையினர் தான் எங்களை கந்துவட்டிக்காரர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்'' என்றார்.

இதற்கிடையில், கந்துவட்டிக் கொடுமை காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருவது தொடர்பாக, மானாமதுரை டிஎஸ்பி சுகுமாரன் விசாரித்து வருகிறார்.

அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''இப்போதுதான் புதுடெல்லியிலிருந்து வந்தேன். அந்த வீடியோவைப் பார்த்தேன். அவரது குடும்பத்தினர் புகார் மனு திருப்புவனம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளனர். நாளை சிவகங்கைக்கு தமிழக ஆளுநர் வருகிறார். அந்த வேலைகளில் உள்ளோம். எனவே, மதுரை மருத்துவமனையில் உள்ளவரைச் சந்தித்து கந்துவட்டி கொடுமைக்கான ஆதாரங்களை சேகரித்துவிட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x