Published : 11 Jan 2019 05:17 PM
Last Updated : 11 Jan 2019 05:17 PM

பெண் ஊழியருக்குப் பாலியல் தொந்தரவு: போலி பத்திரிகையாளர் கைது

சென்னையில் போலி பத்திரிகையாளர் ஒருவர் தனது அலுவலகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் எளிதாக ஆரம்பிக்கப்படும் தொழில் பத்திரிகை சங்கம் தொடங்குவது. பத்திரிகை ஒன்றைப் பதிவு செய்துவிட்டு அதன்பெயரை வைத்தே போலி சங்கங்கத்தை ஆரம்பித்து அதன் பெயரை வைத்து சங்க அடையாள அட்டைகளை ரூ.2000 முதல் 5000 வரை விற்பது தற்போது லாபகரமான தொழிலாக உள்ளது.

சங்கத்துக்காக விழா நடத்தி விஐபிக்களை அழைப்பது, காவல் உயர் அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, பின்னர் அதை வைத்தே கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவது சமீபகாலமாக தொடர்கதையாகி வருகிறது. இதுகுறித்த பல புகார்கள் காவல்துறைக்கு வந்தவண்ணம் உள்ளது.

சமீபத்தில் மீஞ்சுரில் ஒரு குறிப்பிட்ட போலி சங்கத்தின் ஆட்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டியதாக போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். தற்போது மீண்டுமொரு வழக்கில் ஒரு போலி பத்திரிகையாளர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலாங்கரை ஒர்க்கர்ஸ் எஸ்டேட் பகுதியில் வசிப்பவர் சிரஞ்சீவி அனீஸ் (41). இவர் ஸ்பென்சர் பிளாசா முதல் மாடியில் ஆசை மீடியா நெட்வர்க் என்கிற அலுவலகத்தை ஓரு வருடமாக நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் ராதா (28) ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் மேனேஜராக மூன்று மாதங்களாகப் பணிபுரிந்து வருகிறார்.

வேலைக்கு ஒழுங்காக வந்தும் கடந்த 2 மாதமாக சரியாகச் சம்பளம் கொடுக்காமல் சிரஞ்சீவி இழுத்தடித்து வந்துள்ளார். இதுகுறித்து கேட்கச் சென்ற தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் சிரஞ்சீவி ஈடுபட்டதாக ராதா கடந்த 2-ம் தேதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்று ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் சிரஞ்சீவி அனீஸை அழைத்து விசாரணை நடத்தியதில் புகார் உண்மை என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரைக் கைது செய்து அவர் மீது ஐபிசி 354 ( பெண்மைக்கு களங்கம் ஏற்படும் வகையில் செயல்படுவது) 354 (ஏ) (பாலியல் துன்புறுத்தல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட சிரஞ்சீவி அனீஸ் ‘தமிழக ஜர்னலிஸ்ட் யூனியன்’ என்கிற சங்கத்தில் மத்திய சென்னை தலைவராக இருப்பதாக அடையாள அட்டையையும் வைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x