Published : 24 Jan 2019 11:48 AM
Last Updated : 24 Jan 2019 11:48 AM

கோடநாடு விவகாரம்: சயான் மற்றும் மனோஜை வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். கொலை மற்றும் கொள்ளை வழக்கில் 11 பேர் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இரண்டாம் குற்றவாளியான சயான், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். இதில் சயானின் மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயத்துடன் சயான் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கு தொடர்பாக கேரள மாநிலத்தைச் சேர்ந்த திபு, ஜிதின் ஜாய், ஜம்சீர் அலி, சந்தோஷ் சமி, மனோஜ், உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன சயானை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை கோத்தகிரி நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். பிப்ரவரி மாதம் 2-ம் தேதி வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சயான் மற்றும் மனோஜ் பத்திரிகையாளர் சாமுவேலுடன் சேர்ந்து கோடநாடு விவாகரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்புள்ளதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை மறுத்த முதல்வர் பழனிச்சாமி குற்றம் சாட்டியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் டெல்லியில் இருந்து சயான் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிபதி ஜாமீனில் விடுவித்தனர். சாமுவேலைக் கைது செய்ய தமிழக காவல்துறையினர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் ஆகியோரின் ஜாமீனை ரத்து செய்ய அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அரசு வழக்கறிஞர் நந்தகுமார் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றவாளிகளான சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரின்  ஜாமீனை ரத்து செய்ய கோரி உதகையில்  உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அரசு சார்பில்  தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்காக ஏற்றுக் கொள்ளபட்டது. 24-ம் தேதி சயான் மற்றும்  மனோஜ் ஆகிய இருவரும் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

இதன் பேரில் இன்று (வியாழக்கிழமை) உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் சயான் மற்றும் மனோஜ் சார்பில் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜரானார். பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.வடமலை சயான் மற்றும் மனோஜ் 29-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x