Published : 07 Jan 2019 01:51 PM
Last Updated : 07 Jan 2019 01:51 PM

திருவாரூர் இடைத் தேர்தல் ஒத்திவைப்பு: மார்க்சிஸ்ட் வரவேற்பு

திருவாரூர் இடைத் தேர்தல் ஒத்திவைப்பு தேர்தல் ஆணையத்தின் பின்சிந்தனை எனினும் வரவேற்கத்தக்கதே என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் 20 சட்டப்பேரவை தொகுதிகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் காலியாக உள்ளன.  திருப்பரங்குன்றம் தொகுதியைத் தவிர இதர தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் எதுவும் இல்லை. இத்தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு நீதிமன்றத் தடைகள் ஏதுமில்லை. தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டு எதிர்க்கட்சிகள் இத்தொகுதிகளில்தேர்தல் நடத்த வேண்டுமென வற்புறுத்தி வந்துள்ளன.

ஆனால், தேர்தல்ஆணையம் சொத்தையான காரணங்களைச் சொல்லி இத்தொகுதிகளில் தேர்தல் நடத்துவதை தொடர்ந்து தள்ளிப்போட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்தது. திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண உதவிகள் கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.

அதிமுக அரசு நிவாரணப் பணிகளையும், கணக்கெடுப்புப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றாமல் அலங்கோலமாக மேற்கொண்டுள்ளது. வாக்காளப் பெருமக்கள் அடிப்படைத் தேவைகளுக்கு ஆலாய் பறந்து கொண்டுள்ள நிலையில் தேர்தல் நடத்துவதும், வாக்கு சேகரிப்பதும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல ஆகி விடும் என்பதால் இத்தொகுதியில் தேர்தல் நடத்துவது பொருத்தமற்றது என பரவலாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.

இங்குள்ள நிலைமைகள் அனைத்தும் மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் தெளிவாக தெரிந்திருந்த போதிலும் இத்தொகுதியில் தேர்தல் நடத்த முன்வந்தது ஏன் என்பதுகேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துக்கட்சி நிர்வாகிகளது ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தலுக்கு இது பொருத்தமான காலம் அல்ல என ஒருமனதாக கருத்து தெரிவிக்கப்பட்ட பின்னணியில் தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவு தேர்தலை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இத்தகைய ஆய்வுகளையெல்லாம் முன்கூட்டியே தேர்தல் ஆணையம் மேற்கொள்ளாமல் தானடித்த மூப்பாக தேர்தலை அறிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீது விழுந்துள்ள கரும்புள்ளி என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனினும் மக்களது கருத்துகளுக்கு பின்னர் தேர்தல் ஒத்தி வைத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கதே.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் நடத்தக் கூடாது என கடிதம் எழுதியிருப்பது காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் வாக்காளப் பெருமக்களது ஜனநாயக உரிமையைபறிக்கும் நடவடிக்கையாகும். ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல்களை இரண்டு ஆண்டுகளாக நடத்தாமல் அதிமுக அரசு அரசியல் சட்டத்திற்கு விரோதமாகத் தள்ளிப் போட்டு வருவது அறிந்ததே.

இவ்வாறு கூறுவதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் எந்த தேர்தலையும் சந்திக்கும் திராணியற்றதாக ஆளும் அதிமுக உள்ளது என்பது தெளிவாகிறது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு சுட்டிக்காட்டவிரும்புகிறது'' என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x