Published : 30 Jan 2019 11:28 AM
Last Updated : 30 Jan 2019 11:28 AM

பல்லாவரத்தில் இரவு நேரத்தில் மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட போலி காவலர் கைது: போலீஸார் தீவிர விசாரணை

பல்லாவரத்தில் இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட போலி காவலரை போலீஸார் கைது செய்தனர்.

பல்லாவரம் ஈஸ்வரி நகர், ரயில் நிலையம் அருகே தொடர்ந்து வழிபறி சம்பவங்கள் நடந்து வந்தன. இதனையடுத்து பல்லாவரம் போலீஸார் அந்த பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். பல்லாவரம் காவல் நிலையல் காவலர் டில்லி பாபு ஈஸ்வரி நகர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலி காவலர், போலீஸைக் கண்டவுடன் காவலர் உடையை மறைத்து வேறு ஒரு சட்டையை அணிந்து கொண்டார்.

அந்தப் பகுதி ரோந்துக் காவலர் டில்லி பாபு அவரை விசாரித்தபோது தான் லாரி கிளீனர் என்றும் நண்பரை பார்க்க நிற்பதாகவும் தெரிவித்தார். அவன் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த காவலர் டில்லி பாபு விசாரித்தார்.

சட்டையை கழட்டும்படி கூறினார். சட்டையை கழட்டியபோது காவலர் உடையில் இருந்தது தெரியவந்தது. யார் என விசாரித்தபோது நான் கிருஷ்ணகிரியில் ஹோம் கார்டு எனவும் தெரிவித்தார். தொடர்ந்து முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

இதையடுத்து அந்த நபரை, டில்லி பாபு பிடித்து பல்லாவரம் போலீஸாரிடம் ஒப்படைத்தார். போலீஸார் விசாரணையில், போலீஸ் உடையுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டது பம்மலை அடுத்த நாகல்கேணி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த தினகரன் (22). திருமுடிவாக்கத்தில் உள்ள ஒரு கம்பேனியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக பல்லாவரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து போலி காவலரைக் கைது செய்தனர். இரவு நேரங்களில் போலீஸ் உடையுடன் பல்லாவரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்களை மடக்கி பணம் வசூல் செய்து வந்தது தெரிந்தது. இதனைத்தொடர்ந்து தினகரனைக் கைது செய்த போலீஸார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்செய்து சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x