Published : 10 Sep 2014 07:07 PM
Last Updated : 10 Sep 2014 07:07 PM

திமுக தலைமையைப் பிடிக்க திட்டமிட்டேனா?- ஸ்டாலின் விளக்கம்

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், 'கட்சியின் தலைமையைப் பிடிக்க திட்டமிட்டதாக' வெளியான தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், கட்சியை பலப்படுத்தும் முயற்சியில், திமுக தலைவர் கருணாநிதி வழியில் தான் பணியாற்றிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தின் மாவட்டங்கள் தோறும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கட்சித் தொண்டர்களையும், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும், இந்தக் கட்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது செயல்படும் கட்சி முன்னோடிகளையும் தனித்தனியே சந்தித்து பேட்டி காணும் நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி, இதுவரை 12 மாவட்டங்களை முடித்துள்ளேன்.

இந்த நிகழ்ச்சிகள் பற்றி தலைவர் கருணாந்தி, பொதுச் செயலாளர் க.அன்பழகன் ஆகியோருக்கும் தெரிவித்து, அவர்களது ஆலோசனைகளையும் பெற்றுள்ளேன்.

நேர்காணலுக்குப் புறப்படும் முன் தலைவரிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டேன். அவரும் வாழ்த்தி அனுப்பினார். தலைவர் கட்சியின் முன்னணியினர் மட்டுமின்றி, கடைக் கோடித் தொண்டனுக்குமிடையே உள்ளப் பாசப் பிணைப்பை இந்த இயக்கத்தின் இதயங்களாக உள்ள தோழர்கள் அறிவர்.

இன்றும்கூட 91 வயதிலும் தளர்வின்றி கட்சித் தலைவர் உழைத்திட்டாலும், முன்பு போல பல ஊர்களுக்கும் சென்று சுற்றிச் சுழன்றி பணியாற்றிட அவரது உடல் நிலை ஒத்துழைக்காத நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழக்க என்ன காரணம் என்பதை அறிந்திடவும், கட்சி வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் நாம் பணியாற்ற வேண்டும் என்பதை எடுத்துக் கூறிடவும், தலைவர், பொதுச் செயலாளர் பேராசிரியர் வகுத்துத் தந்த வழியில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

நான் சென்ற இடங்களில் எல்லாம் கட்சியின் முதியவர்களிடம் இளமைத் துள்ளலும், இளைஞர்களிடம் எதனையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் முதிர்ச்சியும் காணப்படுவது கண்டு, இந்த இயக்கத்தை எவராலும் வீழ்த்திட முடியாது; தேர்தல்களில் வெற்றி தோல்விகள் வரும், போகும்; ஆனால் இந்த இயக்கம் ஆயிரம் காலத்துப் பயிராய் செழித்தோங்கி நிற்கும் என்பதைக் கண்கூடாகக் காண்கிறேன்.

அழித்து விடலாம் கட்சியை என இறுமாந்து பல இட்டுக்கட்டிய கட்டுக் கதைகளை அவ்வப்போது அவிழ்த்து விட்டவர்கள் அடி வயிற்றில் இந்த எழுச்சி புளியை கரைக்க ஆரம்பித்துள்ளது. அஸ்திவாரமற்று அவர்கள் எழுப்பும் கற்பனை மாளிகைகள் காலத்தின் ஓட்டத்தில் அடுத்தடுத்து தரை மட்டமாகி வருகின்றன.

எனக்குப் பகையாக பலரை சிருஷ்டித்து சிண்டு முடிய நினைத்து எதுவும் பலனளிக்காத நிலையில் இன்று, தலைவர் அடிக்கடி கூறுவது போல ஜமுக்காளத்தில் வடி கட்டிய பொய்யைப் பரப்பி வருகின்றனர். இந்தச் சுற்றுப் பயணத் துவக்கத்திலேயே சில ஏடுகள், தலைமையைப் பிடிக்க திட்டமிட்டு ஸ்டாலின் சுற்றுப் பயணம் எனத் தலைப்பிட்டதை தோழர்கள் அறிவார்கள். தலைவரையும் இந்த இயக்கத்தையும் யாராலும் பிரித்துப் பார்க்க முடியாது.

என்னைப் பொறுத்தவரை நான் தலைவரின் அடி ஒற்றி நடப்பவன். தலைவரின் அறிவு, ஆற்றல், அரசியல் வியூகங்கள், ஓய்வறியா உழைப்பு என அத்தனை குணங்களையும் பெற்றவர்கள் தோன்றுவது எளிதல்ல; அதனை உணர்ந்தவன் நான்.

தலைவர் வழியில் அவர் தனது குடும்பத்தை விடப் பெரிதாக நினைக்கும் இந்த இயக்கத்தினை - இயக்கத் தொண்டர்களை - முன்னணி யினரைச் சந்தித்து உத்வேகம் உருவாக்கிடும் இந்த நிகழ்ச்சிகளால் தலைவரை விட பெரிதும் மகிழ்ச்சி கொள்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன்.

இந்நிலையில் தலைவருக்கும், எனக்கும், கட்சி முன்னணியினருக்கும் இடையே பிளவை உருவாக்கிட நினைத்து கண்டதை எழுதுபவர்களுக்கு கூறிக் கொள்வேன் - ஆப்பசைத்த குரங்கின் நிலை தான் பின்னர் உங்கள் நிலையும் ஆகும் என்பதை உணர்வீர். சிண்டு முடியும் வேலையை தொடராமல் இனியாவது நிறுத்துங்கள். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்" என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x