Published : 09 Jan 2019 04:59 PM
Last Updated : 09 Jan 2019 04:59 PM

நகை வியாபாரி வீட்டில் 13 கிலோ தங்கம், 65 கிலோ வெள்ளி கொள்ளை: சொந்த ஊர் சேர்வதற்குள் கொள்ளையர்களை மடக்கிய போலீஸார்

 

கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 13 கிலோ தங்க நகைகள், 65 கிலோ வெள்ளி  கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் ரயிலில் சென்று ஊர் சேர்வதற்குள் போலீஸார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

நகை கொள்ளை:

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை உலராமன் கோயில் தெருவில் வசிப்பவர் சந்தோஷ் குமார் (31). இவர் சொந்தமாக அடகுக்கடை மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் அடகுக்காக வாங்கும் நகைகள் மற்றும் புதிய நகைகளை தனது வீட்டின் லாக்கரில் வைப்பது வழக்கம். அதேபோன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் நகைகளை லாக்கரில் வைத்துவிட்டு பூட்டிவிட்டுச் சென்றார்.

மறுநாள் திங்கட்கிழமை மதியம் லாக்கரை திறந்த பார்க்கும்போது அதிலிருந்த 13 கிலோ தங்க நகைகள், 65 கிலோ வெள்ளி, ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் குமார் உடனடியாக கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை அடுத்து வடக்கு மண்டல இணை ஆணையர் பிரேமானந்த் சின்ஹா, துணை ஆணையர் ரவளி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்கள் போகும்போது கண்காணிப்பு கேமரா மற்றும் அதன் பதிவுகள் இருந்த ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.

கொள்ளையர்கள் யார்?

கொள்ளையில் ஈடுபட்டது யார் என போலீஸார் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கிய போது யார் மீதாவது சந்தேகம் உள்ளதா? என போலீஸார் கேட்டபோது கடந்த டிசம்பர் மாதம் வேலையை விட்டு நின்ற சமையல்காரன் ஹன்ஸ்ராஜ் மீது சந்தேகம் உள்ளதாக சந்தோஷ் குமார் தெரிவித்தார். இதையடுத்து ஹன்ஸ்ராஜ் தங்கியிருக்கும் இடத்திற்கு ஆள் அனுப்பி சோதித்தபோது ஹன்ஸ்ராஜ் இல்லாதது தெரியவந்தது.

அதே தெருவில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீஸார் ஆராய்ந்த போது அதில் பெரிய பைகளுடன் இரண்டு பேர் செல்வது தெரிந்தது. அதை நகைக்கடை உரிமையாளரிடம் போலீஸார் காட்டியபோது அது தனது வேலைக்காரன் ஹன்ஸ்ராஜ் மற்றும் அவரது சகோதரர் என அவர் தெரிவித்தார்.

இதையடுத்து கொள்ளையர்கள் குறித்த விவரங்கள் போலீஸாருக்குத் தெரியவந்தது. அதன் பின்னர் போலீஸார் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.

எப்படி சிக்கினார்கள்?

கொள்ளையன் ஹன்ஸ்ராஜின் செல்போனை முதலில் டிராக் செய்ய ஆரம்பித்தார்கள். இதில் அவரது செல்போன் சிக்னல் விழுப்புரம் அருகே காட்டியது. அதன் பின்னர் அது நகரத் தொடங்கியது. இதையடுத்து உஷாரான போலீஸார் உடனடியாக செயலில் இறங்கி கொள்ளையர்களைப் பிடிக்க முயற்சித்தனர்.

போலீஸாரின் சோதனையில் கொள்ளையர்கள் ரயிலில் ஆந்திரா நோக்கி சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வது தெரியவந்தது. அவர்களை ஆந்திரா செல்லவிட்டால் அங்கிருந்து அவர்கள் தப்பிவிடுவார்கள் என முடிவு செய்த இணை ஆணையர் பிரேமானந்த் சின்ஹா சென்னை போலீஸ் விரைவாக அங்கு செல்வதும் சாத்தியமில்லை என்பதைப் புரிந்துகொண்டார்.

உடனடியாக களத்தில் இறங்கிய அவர் தனது பேட்ச் மேட் அதிகாரியான மத்திய ரயில்வே போஸ்ட் கமாண்டர் ஜி.வி.குமாரைத் தொடர்புகொண்டார். ரயில் ஆந்திரா நோக்கி ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது, அவர்களை மடக்கிப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டதன்பேரில் ஜி.வி.குமார் மத்திய ரயில்வே போலீஸாரைக் களம் இறக்கினார்.

உடனடியாக கொள்ளையர்கள் இருவரின் புகைப்படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய ரயில்வே போலீஸார் புகைப்படங்களுடன் சம்பார்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரயிலை எதிர்நோக்கி காட்பாடி அருகே காட்டுப்பகுதியில் காத்திருந்தனர். ரயில் வந்தவுடன் அதை வழியிலேயே நிறுத்திய போலீஸார் ஒவ்வொரு பெட்டியாகச் சோதனையிட்டனர்.

ஏசி கோச், ரிசர்வ் கோச் எதிலும் அவர்கள் இல்லாத நிலையில் முன்பதிவில்லா பெட்டியில் மூட்டை முடிச்சுகளுடன் கொள்ளையர்கள் உட்கார்ந்திருந்தனர். அவர்களை கீழே இறக்கிய போலீஸார் ரயிலை செல்ல அனுமதித்தனர்.

பின்னர் சென்னை போலீஸார் காட்பாடி சென்று அங்கு பிடித்து வைக்கப்பட்டிருந்த கொள்ளையன் ஹன்ஸ்ராஜ் அவரது சகோதரர் ஹரேந்திர சிங் இருவரையும் கைது செய்து தங்கம், வெள்ளி மீதியுள்ள ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து சென்னை அழைத்து வந்தனர்.

இவை அனைத்து புகார் அளித்த 24 மணி நேரத்திற்குள் நடந்து முடிந்தது. கொள்ளையர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

ஏன் கொள்ளையடித்தோம்?- கொள்ளையன் வாக்குமூலம்

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த தான் சந்தோஷ் குமார் வீட்டில் சமையற்காரராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஒழுங்காக வேலை செய்ததாகவும், சந்தோஷ் குமார் வேலையை மட்டும் வாங்கிக்கொண்டு ஒழுங்காக சம்பளம் தராமல் இழுத்தடித்ததாகவும் கூறியுள்ளார். மூன்றரை ஆண்டுகளில் சந்தோஷ் குமாரின் வியாபாரம், வரவு அவரது வீட்டின் மூலைமுடுக்கு, நகைகளை வைக்கும் லாக்கர் அதன் சாவியை எங்கே வைப்பார் என அத்தனையும் தனக்கு அத்துப்படி என தெரிவித்துள்ளார்.

தனக்கு சம்பளம் சரியாகத் தராததால் ஆத்திரத்தில் இருந்த தான் சந்தோஷ் குமாருக்கு பாடம் புகட்ட கொள்ளையடிக்கத் தீர்மானித்ததாகவும் சந்தேகம் வராமல் இருக்க ஒருமாதம் முன்னரே வேலையை விட்டு நின்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் தனது தம்பியுடன் சேர்ந்து திட்டமிட்டு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சந்தோஷ் குமார் வீட்டு மொட்டை மாடி வழியாக கயிறு கட்டி உள்ளே இறங்கி சாவியை எடுத்து நகை, பணம், வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து அவற்றை மூட்டைகளாகக் கட்டிக்கொண்டு வெளியே வந்ததாகவும் தான் சிக்கிக்கொள்ளாமல் இருக்க கண்காணிப்பு கேமரா மற்றும் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

சென்னையிலிருந்து தப்பியது எப்படி?

உடனடியாக ரயில் நிலையம் சென்று அங்கிருந்து உத்தரப் பிரதேசம் செல்ல திட்டமிட்டதாகவும், ஏதேனும் சந்தேகம் வந்து தன்னை போலீஸார் ரயில் நிலையத்தில் தேடுவார்கள் என்பதற்காக ஒரு கால் டாக்ஸ ிபிடித்து விழுப்புரம் சென்றதாகவும் அங்கிருந்து சம்பர்க் எக்ஸ்பிரஸ் மூலம் விஜயவாடா சென்று அங்கிருந்து நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் மூலம் உத்தரப் பிரதேசம் சென்று அங்கு நகைகளை சொந்தக்காரர்களிடம் பிரித்துக் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிடலாம் என்று திட்டமிட்டதாகவும் ஹன்ச்ராஜ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்திற்குச் சென்று அங்கு ஒரு நண்பரைப் பார்த்துவிட்டு பின்னர் ரயிலில் விஜயவாடா சென்றதாகவும், வழியில் காட்பாடி அருகே ரயில் நின்றபோது தாங்கள் அகப்படுவோம் என நினைத்துப் பார்க்காத நிலையில் தங்களைப் போலீஸார் பிடித்துவிட்டதாகவும் ஹன்ஸ்ராஜ் கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் சென்றிருந்தால் இருவரையும் பிடித்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய போலீஸார் ஹன்ஸ்ராஜ் செய்த ஒரே நல்ல காரியம் செல்போனை தன்னுடன் எடுத்துச் சென்றது என தெரிவிக்கின்றனர்.

துரிதமாக அடுத்தடுத்த திட்டமிடல் மூலம் கொள்ளையர்களைப் பிடித்து நகைகளை மீட்ட வடக்கு இணை ஆணையர் பிரேமானந்த் சின்ஹா தலைமையிலான போலீஸாருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x