Published : 05 Jan 2019 07:54 AM
Last Updated : 05 Jan 2019 07:54 AM

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயக் கடன், மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட் டங்களில் விவசாய, கல்வி, மகளிர் சுயஉதவிக் குழு, மீன்பிடி படகு கடன்களையும், மின் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் ‘கஜா’ புயல் பாதிப்புகள் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசியதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்: ‘கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை, மா, பலா, முந்திரி போன்ற மரங்கள், நெல், வாழை போன்ற பயிர்கள், வீடுகள், கால்நடைகள் என வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகளும், பொதுமக்களும் பரிதவிக்கின்றனர். எனவே, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட விவசாய, கல்வி, மகளிர் சுயஉதவிக் குழு, மீனவர் கள் படகு வாங்க பெற்ற கடன் களை தள்ளுபடி செய்ய வேண்டும்.

துரை.சந்திரசேகரன் (திமுக): புயலால் பாதித்த மாவட்டங்களுக்கு தமிழக அரசு கேட்ட நிவாரணத்தை மத்திய அரசு வழங்கவில்லை. வரலாறு காணாத பேரிழப்பு ஏற்பட்டும் பிரதமர் நேரில் வந்து பார்வையிடவில்லை. பாதிக் கப்பட்ட மக்களுக்கு இன்னமும் முழுமையாக உதவிப் பொருட்கள் கிடைக்கவில்லை. தமிழக அரசு வழங்கிய உதவிப் பொருட்கள் அடங்கிய தொகுப்பில் பால் பவுடர் கெட்டுப் போயிருந்தது. இதனால் அந்தப் பையில் இருந்த மற்ற பொருட்களும் வீணாகிவிட்டன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.

கே.ஆர்.ராமசாமி (சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர்): புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்றேன். வீடுகள், உடமைகளை இழந்து மக்கள் வீதிகளுக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசின் நிவாரணப் பொருட்கள் பலருக்கும் கிடைக்கவில்லை. மத்திய அரசு போதுமான நிதி வழங்கவில்லை. அதைப் பெற தமிழக அரசு அனைத்து வகைகளிலும் முயற்சிக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் விவசாயக் கடன்கள், மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

முகமது அபூபக்கர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் நேரில் பார்வையிடாதது வருத்தம் அளிக்கிறது. மத்திய அரசிடம் இருந்து போதுமான நிதியை தமிழகம் போராடிப் பெற வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயக் கடன்களையும், மின் கட்டணத்தையும் ரத்து செய்ய வேண்டும். புயலால் பள்ளிவாசல்களில் உள்ள மினார்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க சிறுபான்மையினர் நலத் துறையும், வக்ஃப் வாரியத் துறையும் நிதி ஒதுக்க வேண்டும்.

தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி): புயல் நிவாரணப் பணிகளில் நாகப்பட்டினம் பேரவைத் தொகுதியை ஒதுக்கி வைத்துள்ளனர். நாகை தொகுதியில் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கடலூர், நாகை மாவட்டங்களில் மின் கம்பிகளை தரை வழியாக கொண்டு செல்ல வேண்டும். புயல் பாதித்த மாவட்டங்களில் விவசாயக் கடன்கள், மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். தென்னை மரங்கள், மீன்பிடி படகுகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x