Published : 08 Jan 2019 05:30 PM
Last Updated : 08 Jan 2019 05:30 PM

டெண்டர் முறைகேடு புகார்; அறப்போர் இயக்கம் மீது உயர் நீதிமன்றத்தில் ரூ.2 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு

டெண்டர் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு என தெரிவித்த அறப்போர் இயக்கத்திடம் இரண்டு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மேனகா அண்ட் கோ என்ற சாலைப்பணி ஒப்பந்த நிறுவனத்தின் பங்குதாரர் மகேஷ் அறப்போர் இயக்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் மனுவில், சென்னை மாநகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை தொடர்பான பணிகளில் முதல் நிலை ஒப்பந்ததாராக இருந்து வருவதாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பித்து முறையாக தங்களுக்கு டெண்டர் ஒதுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அறப்போர் இயக்கம், கடந்த ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், டெண்டர் நடைமுறைகளை முறையாக ஆராயாமல், தங்கள் நிறுவனத்திற்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும், மேலும் அமைச்சர் வேலுமணியுடன் இணைத்து தங்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தங்கள் நிறுவனத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையிலும் புகார் தெரிவித்துள்ள நிலையில், அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டுகளால் தங்கள் நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாலும், நிர்வாகிகளுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அறப்போர் இயக்கம் தங்கள் நிறுவனத்திற்கு எதிராக கருத்துகளை வெளியிட தடைவிதிக்க வேண்டுமெனவும், அறப்போர் இயக்கம் மற்றும் அதன் நிர்வாக அறங்காவலர் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் இரண்டு கோடியே ஒரு ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடு அளிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், வழக்கு குறித்து அறப்போர் இயக்கம் மற்றும் ஜெயராம் வெங்கடேசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x