Published : 16 Jan 2019 01:09 PM
Last Updated : 16 Jan 2019 01:09 PM

100 அடிக்கு தோசை: சென்னையில் சமையல் கலைஞர்களின் கின்னஸ் முயற்சி வெற்றி பெற்றதா?

கின்னஸ் சாதனை படைக்க வேண்டி உலகின் நீளமான தோசையை சென்னை ஹோட்டல் சரவண பவன் சமையல் கலைஞர்கள் தயாரிக்க முயற்சி மேற்கொண்டனர்.

உலகின் மிக நீளமான தோசை ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. அந்தத் தோசையின் நீளம் 54.86 அடியாகும். அதைக்காட்டிலும் அதிகமாக 100 அடி நீளத்துக்குத் தோசை வார்க்க சென்னை சமையல் கலைஞர்கள் முடிவு செய்தனர்.

சென்னை ஐஐடி வளாகத்தில் இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஹோட்டல் சரவண பவனின் சமையல் கலைஞர்கள் தலைமையிலான குழு இந்தச் சாதனைக்குத் தயாரானார்கள்.

இதற்காக பிரத்யேக தோசை வார்க்கும் கல் 100 அடிக்கு உருவாக்கப்பட்டு, கேஸ் அடுப்பும் தயார் செய்யப்பட்டது.

இந்தச் சாதனையை செய்வதற்காக 37 கிலோ தோசை மாவு, 9.5 லிட்டர் தண்ணீர், 3 கிலோ நெய் ஆகியவை தயார் செய்யப்பட்டது. ஏறக்குறைய 50 சமையல் கலைஞர்கள் சேர்ந்து 100 அடித்து தோசையை ஒரேநேரத்தில் வார்த்தனர்.

கின்னஸ் சாதனை என்பாதல், ஒருவருக்கொருவர் தகவலைப் பரிமாறிக்கொண்டு தோசை உடைந்துவிடாமல், கருகிவிடாமல், பக்குவமாக எடுக்க முடிவு செய்தனர்.

அதற்கு ஏற்றார் போல் அடுப்பில் தீ அதிகமாக எரிந்து தோசைக்கல் அதிகமாக சூடேறிவிடாமல் கவனத்துடன் பார்த்துக்கொண்டனர். இவர்களின் கூட்டு முயற்சிக்கு தோசையும் 100 அடிக்கு ஒரேநேரத்தில் வார்க்கப்பட்டு தயார் ஆனது.

ஆனால், கடைசிநேரத்தில் என்ன ஆனது தெரியுமா?

இதுகுறித்து தலைமை சமையல் கலைஞர் வினோத் குமார் கூறுகையில், “நாங்கள் 100 அடிக்கு தோசை செய்து, கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியில் இறங்கினோம். இதற்காக 100 அடி நீளத்தில் தோசைக்கல், அடுப்பு அனைத்தும் கடும் சிரமத்துக்குப் பின் தயார் செய்தோம்.

நான் இந்த விஷயத்தை நாங்கள் எங்கள் நிர்வாகத்திடம் கூறியபோது அவர்களும் உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டனர். 15 பொறியாளர்கள் இரவு பகலாகச் சேர்ந்து தோசைக்கல்லைத் தயார் செய்தனர்.

மேலும், தோசை வார்க்கும் போது தோசைக்கல் 180 முதல் 200 டிகிரி செல்சியஸ் வரை பராமரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. 50 சமையல் கலைஞர்களும் சேர்ந்து தோசை வார்த்தோம், ஒவ்வொரு சமையல் கலைஞருக்கும் ஒவ்வொரு விதமான பணி கொடுக்கப்பட்டு, அந்தப் பணியை சரியாகச் செய்ய உத்தரவிடப்பட்டது.

தோசைக்கல்லில் நெய் ஊற்றி, தோசை மாவு வார்க்கப்பட்டு தோசை செய்யப்பட்டது. தோசையும் நாங்கள் எதிர்பார்த்தது போன்று சீராக வெந்தது. அதன்பின் தோசையை உருளை போன்று சுருட்டும் முயற்சியில் இறங்கினோம். அப்போது சுருட்டும்போது தோசை எதிர்பாராத விதமாக பல்வேறு துண்டுகளாக உடைந்தன. தோசை உடைந்து போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

கின்னஸ் சாதனையைப் பொறுத்தவரை, எவ்வளவு நீளமான தோசையாக இருந்தாலும், இறுதியில் சுருட்டி வைக்க வேண்டும், உடையக்கூடாது. ஆனால், நாங்கள் 100 அடிக்குத் தோசை செய்தபோதிலும், சுருட்டும்போது உடைந்துவிட்டதால், கின்னஸில் இடம் பெறமுடியாமல் போனது.

அதேசமயம், நாங்கள் மனம் தளரவில்லை. மீண்டும் முயற்சி செய்து 82 அடிக்குத் தோசை வார்க்க முடிவு செய்து தயார் செய்தோம். அது ஆசியாவிலேயே மிகவும் நீளமான தோசை என்று இடம் பெற்றது.

இவ்வாறு வினோத் குமார் தெரிவித்தார்.

ஆசிய சாதனை புத்தகத்தில் தோசை இடம் பெற்ற பின், அந்தத் தோசை பார்வையாளர்கள் அனைவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x