

கொடநாடு விவகாரத்தை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தவில்லை. கொடநாடு துரோகத்தின் சின்னமாக மாறி உள்ளது என மக்கள் நீதி மய்ய அமைப்பாளர் கமல் குற்றம் சாட்டினார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மேற்கு மண்டல அலுவலகத்தை , அதன் தலைவர் கமலஹாசன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசியதாவது:
என்னை குழந்தையாக இருந்தபோது தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள், கலைஞனாக எனக்கு தோள் கொடுத்த தமிழக மக்களுக்கு தோள்கொடுக்க வேண்டியது எனது கடமை. நான் சேவை என்று சொல்ல மாட்டேன் என் கடமையைச் செய்ய வந்தேன் என்பதே உண்மை.
கொடநாடு விவகாரத்தில் ஆளுநரை சந்தித்து ஸ்டாலின் மனு கொடுத்துள்ளாரே?
கொடநாடு விவகாரம் குறித்து அதிகாரிகள் ஆராயவேண்டும். ஆராய வேண்டியது அதிகாரிகள். தேவைப்பட்டால் மேலிடத்திலிருந்து இதை ஆராய வேண்டும். கொடநாடு துரோகத்தின் சின்னமாக மாறி இருக்கிறது. மக்களுக்கும் அவர்கள் தமக்கே இழைத்துக்கொண்ட துரோகத்திற்கும் ஒரு சான்றாக உள்ளது.
நீங்கள் நேர்மையான அரசியல்வாதி என்கிறீர்கள், அப்படியானால் மற்றவர்கள் நேர்மையற்ற அரசியல்வாதிகள் என்கிறீர்களா?
அதில் எந்த ஒரு சந்தேகம் இருக்கிறதா
நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் வேட்பாளராக போட்டியிடுவாரா?
அதை கட்சி முடிவு செய்யும். நான் தனியாளாக முடிவும் செய்யும் விஷயமல்ல. கட்சி எங்களுக்கு அனுசரணையான சூழல் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து முடிவு செய்யும் விஷயம். ஏனென்றால் இதில் தமிழக நலனும் உள்ளது. ஆகவே அவசரப்பட்டு முடிவெடுக்கும் விஷயமல்ல. அதில் அவசரப்பட்டு செய்தி பரப்புவதற்காக சொல்லும் தலைப்பல்ல.
உங்களது கவனம் தமிழக அரசியலில் மட்டும் உள்ளதா?
டெல்லியை நீக்கிவிட்டு தனியாக அரசியல் செய்ய முடியாது. நான் இந்தியன், முதலில் தமிழன்.
நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் முன்னெடுக்கும் முதல் பிரச்சினை எது?
மக்கள் எங்களிடம் முன்னெடுத்து வைக்கிறார்கள் அவர்கள் பிரச்சினைகளை, நாங்கள் எங்கள் பிரச்சினைகளை எடுத்து வைக்கவேண்டிய அவசியமில்லை. வேலை இல்லா திண்டாட்டம், விவசாயிகள் பிரச்சினை, ஏழைகளின் திண்டாட்டம் இவைகள் அனைவரும் அறிந்ததுதான். எந்த வழி என்பதை வல்லுநர்களுடன் சாதாரண மக்களிடமும் கேட்டு வருகிறோம்.
பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை அள்ள உங்கள் திட்டம் என்ன?
நான் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே சொன்னேன், கொள்கைக்கும் திட்டத்துக்கும் வித்யாசம் உண்டு. கொள்கை என்பது மாறாதது. திட்டங்கள் கொள்கை என்னவோ அதற்காக தீட்டுவோம். அது சரியில்லை என்றால் திட்டங்களை மாற்றுவோம். அதன் அர்த்தம் கொள்கை மாறிவிட்டதாக யாரும் விமர்சனம் செய்யக்கூடாது. நிறைய திட்டங்கள் உள்ளது. நீர்நிலைகளை காக்கவேண்டி உள்ளது.
பெண்களின் ஆரோக்கியம், பல்வேறு துறைகள் உள்ளன முக்கியமாக கல்வி வேலை இல்லாதிண்டாட்டம். விவசாயிகளின் திண்டாட்டம். இவைகள் குறித்து வல்லுநர்களுடன் பேசி என்ன தீர்வு என்பது குறித்தும் பேசியுள்ளோம்.
இதில் இலவசங்களும் இருக்குமா?
முதலில் இலவசம் என்று ஒன்றுமில்லை. யாராவது தங்கள் பையிலிருந்து எடுத்து கொடுக்கிறோமா? அல்லது மற்றவர்கள் கையிலிருந்து கொடுக்கிறார்களா? மக்களிடத்திலிருந்து வரும் பணத்தில் மக்களுக்கு கொடுப்பது. அதை செய்யவேண்டும் என்றால் கல்வி, மருத்துவம் இலவசமாக கொடுக்கவேண்டும். அதை முறையாக செய்யவேண்டும்.
அரசு கல்வியை இலவசமாகத்தானே கொடுக்கிறார்கள்?
அரசு இலவசக்கல்வியை கொடுக்கிறார்கள். ஆதாரகல்வியை இலவசமாக கொடுத்தாலும் வேணாம் என்று சொல்லும் அளவுக்கு கொடுக்கவில்லை. ஆதார வசதிகள்கூட கொடுக்காமல் கொடுக்கும் கல்வியை வேண்டாம் என்றுத்தான் சொல்கிறோம். யாசகம் கேட்பவர்கள்கூட அவர்கள் எதிர்ப்பார்த்ததை தராவிட்டால் நம்மிடமே தூக்கி எறிவார்கள். அது கல்வியிலும் இருக்கிறது என்று சொல்கிறோம்.
ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி என்கிறீர்கள் அது எந்த கட்சி?
தமிழகம் கொஞ்சமாவது முன்னேற வேண்டும், ஊழலுக்கு விடைகொடுத்து அனுப்பவேண்டும் என்கிற கனவாவது கண்டுக்கொண்டிருப்பவர்கள் ஒத்தக்கருத்துள்ளவர்கள்.
உயர் சமூக ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு உங்கள் நிலைப்பாடு என்ன?
நான் சொல்வது, இட ஒதுக்கீடு என்பது ஒரு காரணத்திற்காக கொண்டுவரப்பட்ட திட்டம் ஏற்பாடு. அந்த காரணம் நீங்கிவிட்டப்பின் இதுகுறித்து யோசிக்கலாம். அப்படிப்பட்ட காரணம் நீங்கவில்லை என்பதுதான் எனது எண்ணம். அப்படியே நீங்கள் பெரும் வல்லுனர்கள் எங்களைவிட நல்ல யோசனை வைத்திருப்பார்களேயானால் உள்ள ஒதுக்கீடுக்கு எந்தவிதமான குந்தகமும் விளைவிக்காமல் நிறைவேற்றலாம். இருக்கும் இட ஒதுக்கீட்டில் கைவைக்கக்கூடாது.
இட ஒதுக்கீடு அதிகாரப்பகிர்வு அது நிறைவேறிவிட்டதா?
அதிகாரபகிர்வு என்பது அனைத்து மக்களையும் சென்றடையவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
இது ஆன்மிக பூமி, பெரியார் மண், விவசாய பூமி என்கிறார்கள் இந்த மண்ணை எப்படி பார்க்கிறீர்கள்?
மூவருக்கும் சொந்தம்.
கொடநாடு விவகாரம் எதிரிகளின் சூழ்ச்சி என்கிறார் ஓபிஎஸ்?
நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கு என்ன பதில் சொல்கிறார்கள் அதைக் கேட்கவேண்டாமா? ஏதோ அவசரத்தில் நாங்கள் குற்றம் சாட்டிவிட்டோம் என்று சொல்ல முடியாது. இதை தேர்தலுக்காக செய்யவில்லை. பல ஆண்டுகளாக அனுபவித்ததை இன்று குற்றம்சாட்டுகிறார்கள். பல ஆண்டுகளாக இருந்ததை மக்கள் குற்றம்சாட்டுகின்றனர் .
இளைஞர்களுக்கு ஓட்டு போட வைக்கும் வேலையில் ம.நீ.மய்யம் என்ன செய்யும்?
மக்கள் நீதிமய்யம் அவர்களால் ஆனதை செய்வார்கள், எங்களை கேள்விமட்டும் கேட்டுவிட்டு நீங்கள் போய்விடாதீர்கள் உங்களுக்கும் அதில் கடமை உண்டு. உங்கள் ஊடகங்கள் வாயிலாக செய்தியை பரப்ப வேண்டும் உங்கள் செய்தியின்மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
தலைவர் கமல்ஹாசன் இனி நடிகர் கமல்ஹாசனாக செயல்படுவாரா?
நடிகர் கமல்ஹாசன் என்பது, நடிப்பு எனது தொழில். இது என் கடமை.
இவ்வாறு கமல் பதிலளித்தார்.