Last Updated : 21 Jan, 2019 04:01 PM

 

Published : 21 Jan 2019 04:01 PM
Last Updated : 21 Jan 2019 04:01 PM

மரங்களில் விளம்பரப் பலகைகள் வைக்க தடை கோரிய வழக்கு: சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மரங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த பவானி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல மனுவினைத் தாக்கல் செய்தார்.

அம்மனுவில், "தமிழகம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில் சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் மற்றும் விளம்பர அட்டைகள் மரங்களில் ஆணியால் அடிக்கப்படுகிறது. இதனால் மரத்தின் தன்மை குறைந்து, அதில் உள்ள இலைகள் உதிர்ந்து போதிய வளர்ச்சி இல்லாமல் மரத்தின் கூடு மட்டுமே இருப்பதாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மீது மரக்கிளைகள் விழுந்து விபத்து ஏற்படுகிறது. மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால் சுத்தமான காற்று, பருவகால மழை இல்லாமல் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

நெடுஞ்சாலைத்துறையினர் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற மட்டுமே செய்கிறார்கள். புதிய கன்றுகளை வைப்பதில்லை. இதனால் அந்த இடங்கள் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இதையடுத்து சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தேன்.

மனு தொடர்பாக மாவட்ட வனத்துறையினர் ஓரிரு மரங்களில் மீது உள்ள பலகைகளை மட்டும் அகற்றி நடவடிக்கை எடுத்தனர். ஆனால் முக்கிய சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் விளம்பரப் பலகைகள் அகற்றப்படவில்லை. இதனால் மிகுந்த போக்குவரத்து நெரிசலும் வாகன ஓட்டிகள் மீது மரக்கிளைகள் விழுந்து விபத்தும் ஏற்படுகிறது. இதையடுத்து சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரப் பலகைகளை அகற்றவும், மரங்களைப் பாதுகாக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று (திங்கள்கிழமை) நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் மனு குறித்து சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 11-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x